வடதமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் மழை மேகங்கள்: சென்னைவாசிகளே உஷார்

நேற்று மாலை பெய்த மழைக்கு சம்பந்தமே இல்லாமல், காலையில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்று வட தமிழகத்துக்கு கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்வதில் எவ்வளவு மகிழ்ச்சி.
வடதமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் மழை மேகங்கள்: சென்னைவாசிகளே உஷார்


சென்னை: நேற்று மாலை பெய்த மழைக்கு சம்பந்தமே இல்லாமல், காலை முதல் வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்று வட தமிழகத்துக்கு கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்வதில் எவ்வளவு மகிழ்ச்சி.

வானிலை குறித்து பேஸ்புக்கில் தினந்தோறும் அறிவிப்புகளை தெள்ளத் தெளிவாக எடுத்து வைக்கும் தமிழ்நாடு வெதர்மேன் தனது பக்கத்தில் இன்றைய மழை நிலவரம் குறித்து பதிவு செய்துள்ளார்.

அதாவது, பிரகாசமான சூரிய ஒளி, ஈரப்பதம் கொண்ட மழைக்கான மற்றொரு சரியான நாள், அதுவும் நேற்றை விட இன்று வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. வட தமிழகத்துக்கு இன்று கன மழைக்கான மற்றொரு சிறந்த நாளாக அமைந்துள்ளது. எனவே, சென்னை மற்றும் வட தமிழகவாசிகளை மகிழ்விக்கவும், பூமியை குளிர்விக்கவும் மழை மேகங்கள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றன. 

நேற்று ஆர்எஸ் மங்கலம், ராம்நாடு, கமுதி, பரமக்குடி உட்பட ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நல்ல மழை கிடைத்துள்ளது.  சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கன மழை பதிவாகியுள்ளது. தருமபுரி மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் பரவலாக மழை பெய்துள்ளது.

இன்றைய நிலவரம்
வட தமிழகத்தின் வேலூர், விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் இன்று வெப்பச் சலனம் காரணமாக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.  மழையுடன் கூடிய இந்த நன்னாளை அனைவரும் அனுபவியுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.

நேற்று சென்னையில் பெய்த மழை மற்றும் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் ஊருக்குச் செல்வோர் பலரும் கோயம்பேடு நோக்கி படையெடுத்ததாலும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எனவே, இன்றும் மழை உண்டு, ஊருக்குச் செல்வோரும் உண்டு என்பதால் நேற்றைய தினத்தைப் போல போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com