நெல்லையில் ஆக.19இல் தமிழர் உரிமை மாநாடு: நல்லகண்ணு பங்கேற்பு

மத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்தும், கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகளை தொடர்ந்து நடத்த வலியுறுத்தியும திருநெல்வேலியில் வரும் 19ஆம் தேதி தென் மண்டல தமிழர் உரிமை மாநாடு

மத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்தும், கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகளை தொடர்ந்து நடத்த வலியுறுத்தியும திருநெல்வேலியில் வரும் 19ஆம் தேதி தென் மண்டல தமிழர் உரிமை மாநாடு நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் மருத்துவர் எஸ். ராமகுரு, செயலர் இரா. நாறும்பூநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கி இந்த மாநாட்டை நடத்துகின்றன. இந்தி திணிப்பு எதிர்ப்பு, கீழடி, ஆதிச்சநல்லூர் ஆய்வுகள், தமிழர் உரிமை, மொழி உரிமை, வரலாற்று உரிமை ஆகியவை முன்வைத்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆதிச்சநல்லூர் தொல்லியல் மேட்டில் இருந்து பிடிமண் எடுத்து வரப்படுகிறது. பிடிமண்ணை, வரலாற்று அறிஞரும் பேராசிரியருமான கே.ஏ.மணிக்குமார் எடுத்துத் தர, மாநாட்டு மேடையில் அதை பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் பெற்றுக்கொள்கிறார்.
மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக, கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு, இந்தி எதிர்ப்பு கண்காட்சி பாளையங்கோட்டை ஏடிஎம்எஸ் மண்டபத்தில் ஆக.18 ,19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. கண்காட்சியை ஓவியர் சந்ரு திறந்து வைக்கிறார்.
மாநாட்டின் கருத்தரங்க நிகழ்வு ஆக.19ஆம் தேதி மாலை 4 மணிக்கு பாளையங்கோட்டை ஜவகர் திடலில் குமரி மாவட்ட முரசு குழுவினரின் தப்பாட்ட நிகழ்வோடு தொடங்குகிறது. தாமிரவருணி கலைக்குழுவினரின் நையாண்டி தர்பார் மற்றும் கரிசல்குயில் கிருஷ்ணசாமி,கரிசல் கருணாநிதி, ப.திருவுடையான் ஆகியோரின் இசைப்பாடல்கள் இடம்பெறுகிறது.
மாநாட்டையொட்டி, தென் மாவட்டங்களின் பல்வேறு முனைகளில் இருந்தும் நினைவுச் சுடர்கள் கொண்டு வரப்படுகின்றன. வடமொழியின் கலப்பின்றி தனித்தியங்கும் தன்மை கொண்ட தொன்மையான தமிழ் மொழி என்று உணர்த்திட்ட அறிஞர் கால்டுவெல் நினைவுச் சுடர் இடையன்குடியில் இருந்து ராஜகுரு தலைமையில் கொண்டு வரப்படுகிறது. பாமர மக்களின் பாடல்களை தொகுத்த பண்பாட்டு ஆய்வாளர் நா.வானமாமலை நினைவுச் சுடர் சி. திருமலைநம்பி தலைமையிலும், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் இருந்து ஜி.யு.போப் நினைவுச்சுடரும், எட்டயபுரத்தில் இருந்து கவிஞர் உமறுப்புலவர் மற்றும் மகாகவி பாரதி சுடர் ராமசுப்பு தலைமையில் கொண்டு வரப்படுகின்றன.
விருதுநகரில் இருந்து தியாகி சங்கரலிங்கனார் நினைவுச்சுடர் மணிமாறன் தலைமையிலும், குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தில் உயிர் நீத்த புதுக்கடை மற்றும் மார்த்தாண்டம் நினைவு சுடர்கள் ஹசன் தலைமையிலும், ஜீவானந்தம் நினைவு சுடர் பிரிஸ்கில் தலைமையிலும் கொண்டு வரப்படுகின்றன. இந்த நினைவுச் சுடர்களை பேராசிரியர் வி.பொன்னுராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு, பேராசிரியர்கள் மாணிக்கம், கிருஷ்ணன், கவிஞர் தேவேந்திரபூபதி, எஸ்.கே.பழனிச்சாமி, திருக்குறள் பிரபா ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தமிழுக்கு தொண்டு செய்த தமிழறிஞர்கள் தேவநேயப்பாவாணர், சாத்தான்குளம் அ.ராகவன், ஆபிரகாம் பண்டிதர், செய்குத்தம்பி பாவலர், கா.சு.பிள்ளை, எம்.எஸ்.பூரணலிங்கம், ரசிகமணி டி.கே.சி.ஆகியோரது உருவப்படங்களை பேராசிரியர்கள் ராமச்சந்திரன், வளன் அரசு, மேலும்.சிவசு, கவிஞர் பே.ராஜேந்திரன், மயன் ரமேஷ்ராஜா, எல்.கே.எஸ்.மீரான் மைதீன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் திறந்து வைத்து மரியாதை செலுத்துகின்றனர்.
மாநாட்டின் கருத்தரங்க நிகழ்ச்சிக்கு மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகிக்கிறார். மருத்துவர் ராமகுரு முன்னிலை வகிக்கிறார். எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் வரவேற்புரையாற்றுகிறார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில், செயலாளர் பாலா, இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் மாரியப்பன், செயலாளர் உச்சிமாகாளி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்செல்வன் ஆகியோர் பேசுகின்றனர்.
இரா. நல்லகண்ணு, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, சிஐடியூ தலைவர் அ.சௌந்தரராஜன், பேராசிரியர் அ.ராமசாமி, நாவலாசிரியர் சு.வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்த மாநாட்டில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு எழுத்தாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com