கையூட்டு இல்லாத இந்தியா குறிக்கோளாக வேண்டும்! "தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன்

கையூட்டு இல்லாத இந்தியா குறிக்கோளாக வேண்டும் என "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
விழாவில் பங்கேற்ற மாணவர்களின் ஒரு பகுதியினர்.
விழாவில் பங்கேற்ற மாணவர்களின் ஒரு பகுதியினர்.

கையூட்டு இல்லாத இந்தியா குறிக்கோளாக வேண்டும் என "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
சொந்தம் கல்விச் சோலை அமைப்பின் 6 ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியதாவது:
சொந்தம் கல்விச்சோலை எனும் தொண்டு நிறுவனம் பல மாணவர்களை தொண்டுள்ளத்தோடு தயார் செய்கிறது. மேலும், அவர்கள் மாணவர்களின் மேம்பாட்டுக்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கின்றனர் எனும் செய்தி, நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம் பலருக்கு தெரிய வரும். தமிழகம் முழுவதிலும் உள்ள தொண்டுள்ளம் படைத்தவர்கள் இச்செய்தியைப் படிப்பர். அதன்மூலம், அடித்தட்டு, கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில்வதற்கும், அவர்களை மேம்படுத்துவதற்கும் இதுபோன்ற பல கல்விச்சோலைகளை அவர்கள் ஆங்காங்கே தொடங்க முற்படுவார்கள். நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முற்பட்டதன் காரணம் அதுதான்.
கையூட்டு இல்லாத நிர்வாக இயந்திரத்தை ஏற்படுத்துவோம் என சொந்தம் கல்விச்சோலை நண்பர்கள் பேசினர். இதன்மூலம், பெருமிதம் அடைவதோடு, சமூகத்தின் மீது எனக்கிருந்த மனத்தடையும் நீங்கியுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவருமே கையூட்டுப் பெறுபவர்கள்தான் என்கிற நிலைமையை உங்களைப் போன்றவர்களால்தான் மாற்ற முடியும்.

கும்முடிப்பூண்டியில் சொந்தம் கல்விச்சோலை போட்டித் தேர்வுகள் பயிற்சி சேவை மையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் "தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதனுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் எம்.சேகர் (இடமிருந்து 3-ஆவது). உடன் கவிஞர் தமிழ் மணவாளன், பயிற்சியாளர் என்.ஆர்.ரகு, மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முகுந்தன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் ஏ.எம்.காசி விசுவநாதன், தமிழில் எழுதி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற ஆ.மணிகண்டன், ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வாகியுள்ள அ.குலோத்துங்கன் உள்ளிட்டோர்.


தாய்மொழி எனும் அடிப்படை இல்லாமல் எது படித்தாலும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. மொழி என்பது இனத்தின் அடையாளம். மத, சாதி உணர்ச்சிகளைத் தூக்கி எறியுங்கள். மொழி உணர்வை மட்டும் மனதில் கொள்ளுங்கள். மனிதர்களை ஒருங்கிணைப்பது மொழியாக மட்டும்தான் இருக்கும்.
தாய்மொழியில் படிப்பதால் எந்தவிதத்திலும் குறைந்து போவதில்லை. இதற்கு மேடையில் அமர்ந்திருக்கும் நண்பர் மணிகண்டன் சிறந்த உதாரணம். அவர் தாய் மொழியான தமிழில் குடிமைப் பணிகள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் ஆகியுள்ளார்.
மிகப்பெரிய சாதனையாளர்களான மகாத்மா காந்தியடிகள், காமராஜர், லால்பகதூர் சாஸ்திரி, ராஜேந்திர பிரசாத், ராதாகிருஷ்ணன், ராஜாஜி, இந்தியராக நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் உள்பட அனைத்து சாதனையாளர்களும் கிராமத்தில் பிறந்தவர்கள்தான். ஏன் நம் அனைவரின் நெஞ்சத்தில் வாழ்ந்துவரும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் கிராமத்தில் படித்தவர்தான். எனவே, கிராமப்புற மாணவர்கள் தங்களுக்குள், "முடியுமா?" எனத் தோன்றும் மனத் தடையை உடைத்தெறிய வேண்டும்.
கையூட்டு வாங்காமல் அரசுப் பணியாற்றினால், இடம் மாற்றப்படுவர். அவ்வளவுதானே. மாற்றட்டுமே. குடியரசுத் தலைவரே நினைத்தாலும் அரசுப் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடியாது என்ற நிலை உள்ளது.
எனவே, இன்றைய தலைமுறையினர் கையூட்டு பெற மாட்டேன் என சபதம் செய்து துடிப்புடன் செயல்படத் தயாராக வேண்டும். கையூட்டு இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் எனும் குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்.
அவ்வாறு ஏற்படும் மாற்றம், இந்தியாவை வல்லரசாக மட்டுமல்லாமல் , உலகுக்கே வழிகாட்டும் நல்லரசாக உயர்த்தும் என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com