நீட் தேர்வு: மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக இதுவரை மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை தமிழக அரசு பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு: மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக இதுவரை மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை தமிழக அரசு பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
அண்மையில் தில்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு குறித்து பிரதமருடன் விவாதிக்கப்பட்டதாகக் கூறினார். அதுபோல, "தில்லியில் ஒவ்வொரு மத்திய அமைச்சராகச் சந்தித்து நீட் தேர்வுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன், விரைவில் நல்ல செய்தி வரும்' என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில், நீட் தேர்வு பிரச்னை முடிந்துபோன ஒன்று என மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்திருக்கிறார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது, 4 லட்சம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. மேலும், தில்லி சென்றபோது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு மசோதா குறித்து முறையிடாமல் வந்திருப்பதும் வேதனையை அளித்திருக்கிறது.
எனவே, கபட நாடகம் போடுவதை உடனடியாகக் கலைத்துவிட்டு, நீட் தேர்வு விவகாரத்தில் இதுவரை மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் பார்வைக்கு மாநில அரசு வெளியிட வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் ஒவ்வொரு மத்திய அமைச்சரிடமும் விவாதித்தபோது, அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன என்பதை நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்: நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற முடியாமல் போனதற்குப் பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜிநாமா செய்ய முன்வரவேண்டும். அதுபோல, "நீட் தேர்வு பிரச்னை முடிந்து போன ஒன்று", என்று அறிவித்திருக்கும் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தோல்வியை ஒப்புகொண்டு ராஜிநாமா செய்து விட்டு, முதலமைச்சருடன் சேர்ந்து தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com