நீட் விலக்கு: அண்ணா பல்கலை.யில் 500 இடங்கள் காலியாக வாய்ப்பு

நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற தமிழகத்துக்கு நிகழாண்டில் வாய்ப்பு இருப்பதால், அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 500-க்கும் அதிகமான இடங்கள் காலியாக வாய்ப்பு இருப்பதாக பேராசிரியர்கள் கணக்கிட்டுள்ளனர்.
நீட் விலக்கு: அண்ணா பல்கலை.யில் 500 இடங்கள் காலியாக வாய்ப்பு

நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற தமிழகத்துக்கு நிகழாண்டில் வாய்ப்பு இருப்பதால், அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 500-க்கும் அதிகமான இடங்கள் காலியாக வாய்ப்பு இருப்பதாக பேராசிரியர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இதுபோல, முன்னணி பொறியியல் கல்லூரிகளிலிருந்து மேலும் 500-க்கும் அதிகமான இடங்கள் காலியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுகிறது. காலியாகும் முன்னணி பி.இ. இடங்கள் அனைத்தும் நிரப்பப்படாமல் விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வுக்குப் பின்னரே, பி.இ. கலந்தாய்வு தொடங்கப்படும். ஆனால், நிகழாண்டில் நீட் தகுதித் தேர்வு முடிவு வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, திட்டமிட்ட தேதியில் பி.இ. கலந்தாய்வு தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
நீண்ட இழுபறியைத் தொடர்ந்து, முன்கூட்டியே பி.இ. கலந்தாய்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
மேலும், பி.இ. படிப்பில் சேரும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அதன் பிறகு எம்.பி.பி.எஸ். சேரும்போது ஏற்படும் பி.இ. காலியிடங்கள் மீண்டும் நிரப்பப்பட வாய்ப்பே இல்லை என உயர் கல்வித் துறை
அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பி.இ. கலந்தாய்வு கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் 11-ஆம் தேதியோடு நிறைவுபெற்றுள்ளது.
இதற்கிடையே, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி, மத்திய அரசிடம் தமிழகம் சார்பில் தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மத்திய இணையமைச்சர் நிர்மலா சீதாராமன், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அரசுக் கல்லூரி எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப மட்டுமே இது பொருந்தும்.
இதற்காக ஓராண்டுக்கு விலக்குக் கேட்டு புதிதாக அவசரச் சட்ட முன்வடிவை தமிழக அரசு மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறினார்.
இதையடுத்து, முதல்வருடன் ஆலோசனை நடத்திய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிப்பதற்கான அவசரச் சட்ட முன்வடிவு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டு, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
இதன் மூலம், நிகழாண்டில் அரசுக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது உறுதியாகியிருக்கிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்க உள்ளதால், அண்ணா பல்கலைக்கழகத்தில் 500 இடங்கள், பிற முன்னணி கல்லூரிகளில் 500 இடங்கள் என மொத்தம் 1000-க்கும் மேற்பட்ட பி.இ. இடங்கள் காலியாக உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்.ஐ.டி. ஆகிய மூன்று கல்லூரிகளில் மட்டும் 500-க்கும் அதிகமான இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள முன்னணி சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 500-க்கும் அதிகமான பி.இ. இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளதாகவும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ். சேரும் வாய்ப்புள்ள பி.இ. சேர்ந்த மாணவர்கள்: அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, 200-க்கு 200 கட்-ஆஃப் பெற்றிருந்த மாணவ, மாணவிகளில் 36 பேரும் 199 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற 811 பேரில் 645 பேரும் 198 கட்-ஆஃப் மதிப்பெண்ணில் உள்ள 2,097 பேரில், 1,681 பேரும் 197 கட்ஆஃப் மதிப்பெண்ணில் உள்ள 3,766 பேரில் 3,014 பேரும் எம்.பி.பி.எஸ். செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியது:
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடத்தப்படுவதால், எம்.பி.பி.எஸ். இடத்துக்கு இணையான முன்னணி பி.இ. இடங்கள் அனைத்தும் காலியாகிவிட வாய்ப்பே இல்லை. அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் உள்பட முன்னணி பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் 1000 பேர் மட்டுமே, எம்.பி.பி.எஸ். செல்ல வாய்ப்பு இருக்கிறது.
இவர்கள் செல்வதால் ஏற்படும் 1000 பி.இ. காலியிடங்களும், மீண்டும் நிரப்புவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த நிலை தொடரக் கூடாது என்பதற்காகத்தான் அடுத்த ஆண்டு முதல் பி.இ. கலந்தாய்வு ஆன்-லைன் முறைக்கு மாற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com