தாமதமின்றி நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

தாமதமின்றி அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த நாம் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றி மரியாதை செலுத்தும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கொடியேற்றி மரியாதை செலுத்தும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.

தாமதமின்றி அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த நாம் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.
நாட்டின் 71 -ஆவது சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, விழாவில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது: நமது நாடு 70 ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. அப்போது முதல் பிரதமராக பொறுப்பேற்ற நேரு, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும், அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றவும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லவும் உறுதி பூண்டதை நினைத்து, இன்றைய தினம் மீண்டும் நாம் உறுதிமொழியேற்க வேண்டும். மேலும் தனி மனிதனுக்கான உரிமை, உணவு, உடை, உறைவிடம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றை பாதுகாப்பது நீதித் துறையின் கடமையாகும்.
ஆனால், நீதித் துறையில் பல தடங்கல்கள் உள்ளன. இதன் காரணமாக நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தை களைந்து, அனைவருக்கும் தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த, இன்றைய தினம் புதிதாக உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியின்போது, 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற நீதிமன்ற ஊழியர்களின் வாரிசுகளுக்கு பரிசுகள் வழங்கி, அவர் பாராட்டு தெரிவித்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள், தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com