மக்கள் சேவையே இலக்கு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

எதிரில் வரும் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து தமிழக மக்களுக்கு சேவை ஆற்றுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு உழைத்து வருகிறோம் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தின் முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன்.
சென்னை தலைமைச்செயலகத்தின் முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன்.

எதிரில் வரும் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து தமிழக மக்களுக்கு சேவை ஆற்றுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு உழைத்து வருகிறோம் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
நாட்டின் 71-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா எங்களிடம் விட்டுச் சென்ற மக்கள் பணியை சிறிதும் தொய்வில்லாமல் செய்து வருகிறோம். எங்கள் எதிரில் வரும் தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டு தமிழக மக்களுக்கு சேவை ஆற்றுவது மட்டுமே இலக்காகக் கொண்டு உழைத்து வருகிறோம்.
புதிய திட்டப் பணிகள்: அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்று வரை மாநிலம் முழுவதும் நிறைவடைந்த ரூ.6 ஆயிரத்து 772.25 கோடி மதிப்பிலான 33 ஆயிரத்து 139 திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
ரூ.1,114.44 கோடி மதிப்பிலான 4 ஆயிரத்து 199 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த அரசு குறுகிய காலத்திலேயே இந்தப் பணிகளைச் செய்துள்ளது.
முக்கியத் துறைகள்-திட்டங்கள்: பள்ளிக் கல்வித் துறைக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. கணினி ஆய்வகங்கள், அறிவுத் திறன் வகுப்பறைகள் என பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பொது சுகாதாரத் துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தால் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
வேளாண் சாதனைக்காக கிருஷி கர்மான் விருது, நீரா பானத்துக்கு இடுபொருள் மானியமாக ரூ.2,247 கோடி, புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம், உழவர் பாதுகாப்புத் திட்டம் என பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மின்னணு குடும்ப அட்டைகள், மீனவர்களுக்கு மீன்பிடி விசைப் படகுகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அந்நிய நேரடி முதலீடாக...2011-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, அந்நிய நேரடி முதலீடாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 19 கோடியை தமிழக அரசு ஈர்த்துள்ளது. தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுமார் 19 ஆயிரத்து 615 ஏக்கர் பரப்பில் புதிய தொழிற் பூங்காக்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடிமராமத்துப் பணிகள்: விவசாயிகளின் பங்களிப்புடன் ஏரிகளின் நீர்வளத்தை அதிகரிக்க குடிமராமத்துப் பணிகள் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ரூ.300 கோடி மதிப்பில் 2 ஆயிரத்து 65 ஏரிகளைச் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்த நீர் வள, நில வள திட்டத்தின் மூலம் ரூ.787 கோடி மதிப்பில் 220 பணிகள் இப்போது எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் புதிய தடுப்பணைகள், நிலத்தடி கீழ் தடுப்புச் சுவர்கள், 10 அணைக்கட்டுகளை ரூ.1000 கோடி மதிப்பில் 3 ஆண்டுகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்களுக்கு தங்கு தடையின்றி மணல் கிடைப்பதற்காக மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிக அக்கறை: நாட்டின் முன்னேற்றம் கருதி, அனைத்துத் தரப்பு மக்களின் நலன் கருதி, தமிழக அரசு பல புதிய திட்டங்களை வகுத்து அதனை விரைந்து செயல்படுத்தி வருகிறது. திட்டப் பலன்கள் பயனாளிகளுக்கு விரைந்து முழுமையாகச் சென்றடைவதைக் கண்காணிப்பதிலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது.
சுதந்திரத்தைப் பேணிக் காக்கவும், இந்தியத் திருநாட்டை வல்லரசாக்கவும், அதில் தமிழகத்தை வளம் மிக்க மாநிலமாக ஆக்கவும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படும் என்றார் முதல்வர்.
நிகழ்ச்சியில் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால், அமைச்சர்கள், எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com