உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் அரிசி தேவை அதிகரிப்பு: வெளிச்சந்தை விலையில் 20,000 மெட்ரிக் டன் கொள்முதல்

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் அரிசியின் அளவு அதிகரித்துள்ளது.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் அரிசி தேவை அதிகரிப்பு: வெளிச்சந்தை விலையில் 20,000 மெட்ரிக் டன் கொள்முதல்

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் அரிசியின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், மாதத்துக்கு 20 ஆயிரம் மெட்ரிக்டன் அரிசி கிலோ ரூ.22 முதல் ரூ.23 வரை கொடுத்து வாங்கப்படுவதாக உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் 1.96 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் காவலர் அட்டைகள் உள்பட இதர சிறப்புப் பிரிவினரைத் தவிர்த்து 1.92 கோடி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.
இந்த அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதில், 1.56 கோடி குடும்ப அட்டைகளில் உள்ள அனைவரின் ஆதார் எண்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் குறைந்தபட்சம் ஒருவரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை உள்பட சில மாவட்டங்களில் ஒருவரின் ஆதார் எண் கூட இணைக்கப்படாத குடும்ப அட்டைகளும் உள்ளன. சென்னையில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் இணைக்கப்படவில்லை. ஆனாலும் அவர்களுக்குப் பொருள்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
பயோமெட்ரிக் தீவிரம்: குடும்ப அட்டை எண்களை, ஆதார் எண்ணுடன் இணைத்து வருவதால் போலி குடும்ப அட்டைகள் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பயோ-மெட்ரிக் திட்டத்தையும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கும் நபர்கள் தங்களது பெருவிரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்தான் குடும்ப அட்டைக்கு உரியவர் என்பது உறுதி செய்யப்பட்டவுடன் அவருக்கு பொருள்கள் அளிக்கப்படும். இந்தப் புதிய முறை, அமலுக்கு வந்தால் போலி குடும்ப அட்டைகள் முழுமையாக ஒழிக்கப்படும்.
கூடுதல் அரிசி: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாக, ஒரு குடும்பத்துக்கு 20 கிலோ வரை அரிசி அளிக்கப்பட்டது. ஆனால், உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி வழங்க வேண்டும். அதன்படி, 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு தமிழக அரசு வழக்கமாக வழங்கி வந்த 20 கிலோவுக்குப் பதிலாக 25 கிலோ அளித்து வருகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கூடுதலாக அரிசி அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்துக்காக மத்திய ஒதுக்கீட்டில் இருந்து ஆண்டுக்கு 36 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படுகிறது. ஒரு மாதத் தேவையின் அளவு 3.20 லட்சம் மெட்ரிக் டன்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, தனி நபருக்கு 5 கிலோ வீதம் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 25 கிலோ வரை அரிசி வழங்க வேண்டியிருக்கிறது. இதற்காக மாதம் 20 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கூடுதலாகப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அரிசி இந்திய உணவுக் கழகத்திடம் இருந்தே வெளிச்சந்தை விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக, கிலோ ரூ.22 முதல் ரூ.23 வரையில் கூடுதல் விலை கொடுக்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் யாருக்கும் எந்தப் பொருள்களும் நிறுத்தப்படவில்லை. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் அரிசியின் அளவு அதிகரித்திருப்பதே நிஜம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com