அன்று குழந்தைத் தொழிலாளர்கள் - இன்று பி.இ. மாணவர்கள்!

பல்வேறு தொழில்களிலிருந்து குழந்தைத் தொழிலாளியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்டவர்களில் 30 பேர், இன்றைக்கு பொறியியல் படிப்புகளில் சேர்ந்திருக்கின்றனர். மேலும் 150 பேர் பல்வேறு கலை-அறிவியல்

பல்வேறு தொழில்களிலிருந்து குழந்தைத் தொழிலாளியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்டவர்களில் 30 பேர், இன்றைக்கு பொறியியல் படிப்புகளில் சேர்ந்திருக்கின்றனர். மேலும் 150 பேர் பல்வேறு கலை-அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்ந்திருக்கின்றனர்.
ஆனால் குடும்பச் சூழல், இவர்களின் உயர் கல்விக் கனவை பாதியிலேயே தடுத்துவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்குள் இருந்துகொண்டே இருப்பதாக, இவர்களை இந்த அளவுக்கு முன்னேற்றியிருக்கும் குழந்தைத் தொழிலாளர் மீட்பு அமைப்பின் பொறுப்பாளர்கள் கூறுகின்றனர்.
சட்டப்படி, 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைப் பணிக்கு அமர்த்தக்கூடாது. மேலும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களை எவ்வித அபாயகரமான தொழிலிலும் பணியமர்த்தக்கூடாது. இருப்பினும் குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில சிறுவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, பள்ளிக்கே செல்லாமல் பணிக்குச் சென்று விடுகின்றனர்.
இவர்களை மீட்டு மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் சிறந்த பணியை தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
விசைத்தறி -செங்கல் சூளையிலிருந்து... இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 8,156 பேர், தமிழகம் முழுவதும் உள்ள 324 தேசிய குழந்தைத் தொழிலாளர் நலப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்களில் 277 பேர் அண்மையில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதி, அதில் 245 பேர் தேர்ச்சியும் பெற்றனர். இவர்கள் தற்போது பல்வேறு கனவுகளுடன் பொறியியல், கலை -அறிவியல் என பல்வேறு பட்டப்படிப்புகளில் சேர்ந்திருக்கின்றனர்.
சேலத்தில் விசைத்தறி தொழிலிலிருந்து கடந்த 2010 -ஆம் ஆண்டில் மீட்கப்பட்ட ஆவாரங்காட்டைச் சேர்ந்த ஜி.புஷ்பலதா என்ற மாணவி, குமாராபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக். தகவல் தொழில்நுட்பப் படிப்பில் சேர்ந்துள்ளார். இதேபோன்று, அதே பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர் மாணவர்களான வெப்படையைச் சேர்ந்த வினோத்ராஜ், ஆவாரங்காட்டைச் சேர்ந்த எம்.சௌந்தரராஜன் ஆகியோரும் பி.இ. படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
செங்கல் சூளை பணியிலிருந்து மீட்கப்பட்ட தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் பி.இ. கணினி அறிவியல் பிரிவிலும், சரஸ்வதி என்ற மாணவி பி.இ. மின்னியல் மின்னணுவியல் பொறியியல் பிரிவிலும் சேர்ந்திருக்கின்றனர்.
இதுபோன்று, 30 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பிலும், 150 மாணவர்கள் கலை -அறிவியல் பட்டப் படிப்புகளிலும், மீதம் உள்ள மாணவர்கள் டிப்ளமோ படிப்புகளிலும் சேர்ந்திருக்கின்றனர்.
உதவ விரும்புவோர் கவனத்துக்கு... இவர்களைப் பல்வேறு தொழில்களிலிருந்து மீட்டு, மீண்டும் படிக்க வைத்ததில் முக்கியப் பங்கு வகித்த தமிழ்நாடு குழந்தைத் தொழிலாளர் மீட்பு அமைப்பின் பொறுப்பாளர்கள் கூறியதாவது:
பல்வேறு தொழில்களிலிருந்து மீட்கப்படும் இந்தக் குழந்தைகள், படிப்பில் சிறந்து விளங்கி சாதனை படைத்து வருகின்றனர். இந்த ஆண்டும் ஏராளமான மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களில் பலர் தற்போது பட்டப் படிப்பில் சேர்ந்திருக்கின்றனர்.
ஆனால், குடும்பச் சூழல் காரணமாக, கல்விக் கட்டணங்களையும், பிற கட்டணங்களையும் செலுத்த முடியுமா என்ற அச்சம் இவர்களிடையே எழுந்துள்ளது.
இவர்களுக்கு உதவ விரும்புபவர்கள், தமிழக அரசு குழந்தைத் தொழிலாளர் மீட்பு அலுவலகத்தை 044 - 24321407, 24321438 என்ற தொலைபேசி எண்ணிலும்,
www.tnchildlabour@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com