பவானி ஆற்றில் தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் தமிழகத்தை சீண்டிப் பார்க்க கேரள அரசு முயல்கிறது: அன்புமணி ராமதாஸ்

பவானி ஆற்றில் தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் தமிழகத்தை சீண்டிப் பார்க்க கேரள அரசு முயல்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பவானி ஆற்றில் தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் தமிழகத்தை சீண்டிப் பார்க்க கேரள அரசு முயல்கிறது: அன்புமணி ராமதாஸ்

பவானி ஆற்றில் தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் தமிழகத்தை சீண்டிப் பார்க்க கேரள அரசு முயல்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகளை கட்ட திட்டமிட்ட  கேரள அரசு, அவற்றில் இரு தடுப்பணைகளை கட்டி முடித்து விட்டது. மீதமுள்ள 4 தடுப்பணைகளை கட்டும் பணிகளும் தொடங்கியுள்ள நிலையில் அதை தமிழக அரசு தடுக்காதது கண்டிக்கத்தக்கது.

காவிரி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான பவானி நீலகிரி மாவட்டத்தின் குந்தா மலைப்பகுதியில்  உருவாகி முக்காலி வழியாக கேரளத்திற்குள் சென்று அட்டப்பாடி பள்ளத்தாக்கை வளப்படுத்திய பின்னர் அத்திக்கடவு வழியாக மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது. கேரளத்தில் ஒட்டுமொத்தமாக 22 கி.மீ. தொலைவு மட்டுமே பாய்கிறது. அதிலும் பெரும்பாலான பகுதி வனப்பகுதியாகும். அப்பகுதியில் மொத்தம் ஆறு இடங்களில் தடுப்பணைகளை கட்ட தீர்மானித்த கேரள அரசு அதற்கான பணிகளை கடந்த ஜனவரி மாதமே தொடங்கியது. அப்போதே இதுதொடர்பாக தமிழக அரசை நான் எச்சரித்தேன்.

கேரளா தடுப்பணை கட்டுவதற்கு எதிராக உழவர் சங்கங்கள் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் போராட்டம் நடத்தின. ஆனால், அப்போதிருந்த முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியிலும், அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் அதைவிட பெரிய பதவியை கைப்பற்றும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்ததால் பவானியின் குறுக்கே அணை கட்டும் பணிகளை தடுக்கத் தவறி விட்டனர். ஒருகட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக வந்த பிறகும் பவானி ஆற்றில் தமிழகத்தின் நலனை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

அதன்விளைவாக, தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் 2 தடுப்பணைகளை கட்டும் பணிகள் நிறைடைந்துள்ளது. அந்த இரு தடுப்பணைகளிலும்  தண்ணீர் நிரம்பி வழிகிறது. மேலும், சாலையூர், சீரக்கடவு, பாடவயல், சாவடியூர் ஆகிய இடங்களில் இன்னும் நான்கு தடுப்பணைகளை கட்டுவதற்கான பணிகளும் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த சில வாரங்களில் இந்த நான்கு தடுப்பணைகளையும் கட்டி முடிக்க கேரளம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.  இவையும் கட்டப்பட்டால் பவானியில் தமிழகத்திற்கு தண்ணீர் வருவது முற்றிலுமாக நின்று விடும். கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையிலிருந்து தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி,  கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இரண்டரை லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசன ஆதாரமாக பவானி ஆறு தான் திகழ்கிறது. பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டால் கோவை மற்றும் திருப்பூரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்; வேளாண்மையும் பாதிக்கப்படும். இதற்கெல்லாம் மேலாக அத்திக்கடவு&அவினாசி திட்டத்தை செயல்படுத்துவதே கனவாகி விடும் என்பதை அரசு உணர வேண்டும்.

இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைக் கட்ட வேண்டும் என்றால் கடைமடை பாசனப் பகுதி அமைந்துள்ள மாநிலத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், பவானி ஆற்றின் குறுக்கே அணைக் கட்ட கடந்த காலங்களில் கேரள அரசு பலமுறை முயற்சி செய்திருக்கிறது. அப்போதெல்லாம் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் உழவர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக அந்த முயற்சிகளை கேரள அரசு கைவிட்டது. அதேபோல், பாம்பாற்றின் குறுக்கே புதிய அணைகளை கட்டுவதற்கான கேரள அரசின் முயற்சியும் தமிழக மக்களின் எதிர்ப்பு காரணமாக  முறியடிக்கப்பட்டது. இப்போது பவானி ஆற்றில் தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் தமிழகத்தை சீண்டிப் பார்க்க கேரள அரசு முயல்கிறது. தமிழகத்தில் ஊழலுக்காக மட்டுமின்றி, வேறு எதற்காகவும் செயல்படாத அரசு இருப்பதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகளை பறிக்கும் முயற்சியில்  ஆந்திரம், கேரளம், கர்நாடகம்  ஆகிய தென் மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், பினாமி அரசின் உறக்கம் மட்டும் கலையவில்லை.

பதவியைக் காப்பாற்றிக்கொள்வது, அணிகளை இணைப்பது ஆகியவற்றில் மட்டும் தீவிரம் காட்டுவதை தவிர்த்து, தமிழகத்தின் உரிமைகளை காப்பதிலும் பினாமி அரசு கவனம் செலுத்த வேண்டும். அதன் முதல் கட்டமாக பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தவும், கேரளத்தை கண்டிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com