2,653 கூடுதல் மருத்துவ இடங்கள்: எம்.சி.ஐ.யிடம் தமிழக அரசு விண்ணப்பம்

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகழாண்டில் கூடுதலாக 2,653 இடங்களை அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் (எம்.சி.ஐ.) தமிழக அரசு கோரி உள்ளது.
2,653 கூடுதல் மருத்துவ இடங்கள்: எம்.சி.ஐ.யிடம் தமிழக அரசு விண்ணப்பம்

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகழாண்டில் கூடுதலாக 2,653 இடங்களை அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் (எம்.சி.ஐ.) தமிழக அரசு கோரி உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தமிழக அரசு எம்சிஐ -யிடம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது.

நீட் தேர்வு குழப்பத்தால், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு பெறும் வகையில், கடந்த ஆண்டைப் போன்று அவசரச் சட்டம் இயற்றுவற்கு தமிழக அரசு முயற்சித்து வருகிறது. அவசரச் சட்டத்துக்கான முன்வரைவுக்கு அட்டர்னி ஜெனரல், சட்டத்துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை, உள்துறை மற்றும் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
தடை கோரி வழக்கு: இந்நிலையில், "அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும், நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற உத்தரவிட வேண்டும்' என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 22 -ஆம் தேதி வரை கலந்தாய்வை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தேர்வெழுதியவர்களும், நீட் தேர்வு எழுதியவர்களும் பாதிக்கப்படாத வகையில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கூடுதல் இடங்கள்: இதன் காரணமாக, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், நிகழ் கல்வியாண்டில் கூடுதலாக 2,653 இடங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எம்சிஐ -யிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ண, எம்சிஐ தலைவரிடம் வெள்ளிக்கிழமை (ஆக.18) அளித்தார். கூடுதல் இடங்களுக்கு அனுமதியளிக்கும்பட்சத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் என்றும், பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரி ஆகியவற்றில் சேர்த்து மொத்தம் 3,050 மருத்துவ (எம்.பி.பி.எஸ்.) இடங்கள் உள்ளன. மேலும் 200 பல் மருத்துவ (பிடிஎஸ்) இடங்கள் உள்ளன. அவற்றில் 486 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு அளிக்கப்பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் நிரம்பாத 58 இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்காக திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை பெரும்பாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சிபிஎஸ்இ மாணவர்களே பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், கூடுதல் இடங்களுக்கு எம்சிஐ அனுமதியளிக்கும்பட்சத்தில், சிபிஎஸ்இ மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் பயனாக அமையும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளை முடிவு: தமிழக அரசின் திட்ட அறிக்கைக்கு எம்சிஐ திங்கள்கிழமை (ஆக.21) முடிவு தெரிவிக்கும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com