கிணற்றை கிராமத்துக்கு வழங்குவதாக ஒப்பந்தம்: லட்சுமிபுரம் பிரச்னை முடிவுக்கு வந்தது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள பிரச்னைக்குரிய கிணற்றை கிராமத்துக்கு இலவசமாக வழங்குவதாக சனிக்கிழமை ஒப்பந்தம் செய்ததையடுத்து இப்பிரச்னை முடிவுக்கு வந்தது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள பிரச்னைக்குரிய கிணற்றை கிராமத்துக்கு இலவசமாக வழங்குவதாக சனிக்கிழமை ஒப்பந்தம் செய்ததையடுத்து இப்பிரச்னை முடிவுக்கு வந்தது.

லட்சுமிபுரம் ஊராட்சிக்கு கோம்பைக்காடு என்ற இடத்தில் உள்ள கிணறு மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததையடுத்து கிணற்றில் தண்ணீர் வற்றியது. ஆனால் அதன் அருகில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி பெயரில் உள்ள விவசாய கிணற்றில் தண்ணீர் எடுக்கப்பட்டு அவர்களது விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து இந்த கிணறு மற்றும் விவசாய நிலத்தை லட்சுமிபுரம் கிராமத்துக்கு வழங்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் குடிநீர் பிரச்னை தீரும் வரை கிராமத்துக்கு இலவசமாக தண்ணீர் வழங்குகிறோம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இக்கிராமத்திற்கு வைகை அணையில் இருந்து குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த லட்சுமிபுரம் கிராமத்தினர், ஓ.பன்னீர்செல்வம் மனைவி பெயரில் உள்ள கிணறு மற்றும் விவசாய நிலத்தை கிராமத்திற்கு தரவேண்டும் என கூறி விட்டனர். இதனால் போராட்டம் தொடர்ந்தது.
பின்னர், தேனியில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில் பிரச்னைக்குரிய கிணறு மற்றும் விவசாய நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் விற்பனை செய்தனர்.
இதனால் கிராம மக்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் உள்ளிட்ட போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை சுப்புராஜ் தரப்பும், கிராமமக்கள் தரப்பும் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பிரச்னைக்குரிய கிணறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடத்தில் 18 செண்ட் நிலத்தை கிராமத்துக்கு இலவசமாக வழங்குவதாகக் கூறி பெரியகுளம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒப்பந்தம் எழுதப்பட்டது. இதையடுத்து இப்பிரச்னைக்கு தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com