விரைவில் இணைப்பு: இபிஎஸ்-ஓபிஎஸ் சூசகம்

அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருவாரூரில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
திருவாரூரில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அநேகமாக இரு அணிகள் இணைப்பு தொடர்பான அறிவிப்பு வரும் திங்கள்கிழமை வெளியிடப்படலாம் என்றும் அவர்கள் சூசகமாகத் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பினரும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினரும் வெள்ளிக்கிழமை தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனைகளின் நிறைவில், அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு தொடர்பான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இணைந்து வெளியிடுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், அணிகள் இணைப்பில் ஏற்பட்ட இழுபறி தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியாகின.
இந்த நிலையில், திருவாரூரில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுகவின் இரு பிரிவுகளும் (அணிகளும்) விரைவில் இணையும் என்றார். இது குறித்து மேலும் அவர் தெரிவித்தது :
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கத்தை (அதிமுகவை) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றி, சிறப்பாக வழிநடத்தி சென்று கொண்டிருந்தார். அவரது மறைவை அடுத்து இடையில், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இப்போது, அந்தக் கருத்துவேறுபாடுகள் பேச்சுவார்த்தை மூலமாக சரி செய்யப்பட்டு விரைவில் இரு பிரிவுகளும் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுமா? துணை முதல்வர் பதவி ஏற்படுத்தப்படுமா? என கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது, பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை நிறைவடையும் போது அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என முதல்வர் பதிலளித்தார்.
ஓரிரு நாளில் நல்ல முடிவு: இதனிடையே அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியது:
அதிமுக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் நல்ல முடிவு எட்டப்படும். அதிமுக இணைப்பு பிரச்னையில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவைக் காப்பாற்றும் நோக்கிலும், அவர்களின் அரசியல் பாதையைத் தொடர்ந்து வெற்றிகரமாக வெளிப்படுத்தும் வகையிலும், தமிழக மக்கள் மற்றும் அதிமுகவினரின் விருப்பத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும் எங்கள் முடிவு இருக்கும். நல்ல முடிவை எதிர்பார்க்கலாம் என்றார்.
இதே பிரச்னை குறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் அதிமுக இணைப்பு குறித்து ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள்கிழமை நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எதிர்பார்க்கும் செய்தி வரும் என்றார்.
அதிமுக இணைப்பு குறித்து நீங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டுவிட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பேச்சுவார்த்தை முடிந்த பிறகு ஓர் அறிக்கை வெளியிடுவோம். அதில், எல்லா அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.
எங்கள் பேச்சுவார்த்தையில் நிபந்தனை எதுவும் இல்லை, எங்களால் ஆட்சி எதுவும் கலையாது என்று ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்துள்ளேன் என்று அவர் கூறினார்.
சிக்கல் தீர்ந்தது: அதிமுகவில் இரு அணிகளும் இணைவது தொடர்பான அறிவிப்பு வெள்ளிக்கிழமையே (ஆக.18) வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் வெள்ளிக்கிழமை 5 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டும் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சென்னையில் பத்திரிகையாளர்களை சனிக்கிழமை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.


துணை முதல்வர், இரண்டு அமைச்சர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியுடன் இணைந்துவிட்டால், இதுவரை ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தவர்களின் நிலை என்ன என்ற கேள்வி நிர்வாகிகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இதனால், ஓ.பன்னீர்செல்வத்தால் எந்த முடிவு எடுக்க முடியாத நிலை இருந்தது.
இந்த நிலையில், பழனிசாமி அணியின் முக்கிய நிர்வாகிகளும், ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகிகளும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஓரிடத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மீண்டும் ஆலோசனை: இதைத் தொடர்ந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சனிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், மதுசூதனன் உள்பட முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில், இணைப்பு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு அணிகளும் இணைந்து செயல்படுவதே சரியான முடிவு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் மக்களின் விருப்பமும் அதுவாகவே இருப்பதாக நிர்வாகிகளிடம் பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இரு அணிகளும் இணைப்பு குறித்து முறையான அறிவிப்பு வரும் திங்கள்கிழமை வெளியிடப்பட லாம் என்றும் அதிமுகவை வழிநடத்துவதற்காக 17 பேர் கொண்ட குழு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்சரிக்கை: இதனிடையே முறையாக செயல்படவில்லையென்றால் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை மாற்ற நேரிடும் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அணியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டம் முடிந்த பிறகு தினகரன் ஆதரவு எம்எல்ஏவான பழனியப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "எங்கள் ஆட்சி பேருந்துப் பயணத்தைப் போன்றது. நாங்கள் முதலில் ஓ. பன்னீர்செல்வத்தை (டிரைவராக) முதல்வராக அமரவைத்தோம். அவர் சரியில்லையென்பதால் எடப்பாடி கே. பழனிசாமியை முதல்வராக்கினோம். அவரது செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. அவர் முறையாக செயல்படத் தவறினால் அவரையும் மாற்ற நேரிடும் ' என்றார் அவர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு கருத்து வேறுபாடுக்கிடையே தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த தினகரன் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் அணியினருடனான இணைப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது குறித்து வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.
ஓபிஎஸ் அணியினர் இணையும்பட்சத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை முதல்வர் பழனிசாமி எப்படி சமாதானப்படுத்தப் போகிறார் என்பதைப் பொருத்துதான் இணைப்பு முயற்சி வெற்றியடையும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com