இனிக்கும் கரும்பு... கசக்கும் வாழ்வு... கண்ணீரில் பரிதவிக்கும் விவசாயிகள்

முப்போகம் சாகுபடி செய்த விவசாயிகள் இன்று ஒருபோக சாகுபடிக்கே அல்லாடும் நிலையில் இருக்கின்றனர்.
இனிக்கும் கரும்பு... கசக்கும் வாழ்வு... கண்ணீரில் பரிதவிக்கும் விவசாயிகள்

முப்போகம் சாகுபடி செய்த விவசாயிகள் இன்று ஒருபோக சாகுபடிக்கே அல்லாடும் நிலையில் இருக்கின்றனர். நெல் பயிரிட்ட விவசாயிகளின் வாழ்வாதார நிலை இப்படியிருக்க, கரும்பு விவசாயிகளின் கதை கண்ணீரை வரவழைக்கிறது.
தமிழகத்தில் தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலிருந்து விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை ஏறத்தாழ ரூ.1850 கோடி. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பையும் கொடுத்து, அதற்குரியத் தொகையை வாங்க இயலாமல் கண்ணீரில் தவித்துக் கொண்டிருக்கின்றனர் கரும்பு விவசாயிகள்.உலகிலேயே பிரேசில் நாட்டுக்கு அடுத்த அதிகளவில் கரும்பு உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் மொத்தம் 453 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில், கூட்டுறவு நிறுவனங்கள் 252, தனியார் 134, பொதுத்துறை நிறுவனங்கள் 67 சர்க்கரை ஆலைகளை நடத்தி வருகின்றன.
இந்திய அளவில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழகம் போன்ற மாநிலங்கள் கரும்பு உற்பத்தியில் பிரதான இடத்தை வகித்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னையைத் தவிர விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, மதுரை, சிவகங்கை, கோவை, கரூரின் ஒருபகுதி, திருச்சி, அரியலூர்,பெரம்பலூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள் கரும்பு பயிரிடும் பகுதியாக இருந்து வந்தன. கரும்பிலிருந்து சர்க்கரை முதல் பலவகையான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எத்தனால் தயாரிப்பிலும் கரும்பின் பயன்பாடு அதிகம்.
பல்வேறு பலன்கள் இருந்தாலும், கரும்புப் பயிரிட்ட விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தவண்ணமாக இருக்கிறது. விவசாயிகளின் நிலத்தில் கரும்பு பயிரிடும் போது தனியார் சர்க்கரை ஆலைகளின் பிரதிநிதிகள் காட்டிய வேகம், நிலுவைத் தொகையை விவசாயிகளுக்குப் பெற்றுத் தருவதில் இருப்பதில்லை.
ஏறத்தாழ 42 லட்சம் டன் கரும்பு உற்பத்தி தமிழகத்தில் நடைபெற்று வந்த நிலையில், தொடர் வறட்சி, சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை அதிகரிப்பு போன்றவைகளால் இந்த எண்ணிக்கை 7 லட்சம் டன்னாகக் குறைந்திருக்கிறது.
கரும்புக்கு ஆதார விலையாக மத்திய அரசு டன் ரூ.2300 என நிர்ணயம் செய்திருக்கிறது. இந்த விலையுடன் மாநில அரசின் பரிந்துரை விலை ( போக்குவரத்துச் செலவுக்கு ரூ.100 உள்பட) ரூ.550 என மொத்தமாக ரூ.2850 ஆக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் நிர்ணயித்த தொகைகளை விவசாயிகளுக்கு முழுமையாக சர்க்கரை ஆலைகள் வழங்கவில்லை.
மத்திய அரசு நிர்ணயித்த நியாயமான மற்றும் ஆதார விலையை மட்டும்தான் தருவோம். மாநில அரசின் பரிந்துரை விலைக்கான தொகையைத் தரமாட்டோம், அப்படி தந்தாலும் பரிந்துரை விலையில் ரூ.150 வரைதான் தருவோம் என்று பிடிவாதம் காட்டியதோடு நிலுவை வைத்ததால், இதுவரை சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2000 கோடியாக இருந்தது. இதில் கூட்டுறவுத் துறை சர்க்கரை ஆலைகள் ரூ.150 கோடி வரை வழங்கிய நிலையில், மற்றத் தொகை இதுவரையிலும் நிலுவைத் தொகையாகவே இருக்கிறது.
சர்க்கரை விற்பனை விலையைக் காட்டிலும் உற்பத்திக்கும் ஆகும் செலவு அதிகரிப்பு, வரி மேல் வரியாகத் தொடர்ந்து விதிக்கப்படும் வரிகள்,தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரையின் அளவு குறைவதால், எங்களால் மாநில அரசின் பரிந்துரை விலையை முழுமையாகத் தர முடியாத நிலையில் உள்ளோம் எனக் கூறி, விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையைப் பிடித்தம் செய்யத்தொடங்கியதால் வந்த விளைவுதான், தற்போது ரூ.2000 கோடி நிலுவைத் தொகைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
போக்குவரத்துச் செலவுக்கான தொகை ரூ.100 போக மீதமுள்ள ரூ.450 ல்- எங்களால் ரூ.100 மட்டும்தான் பரிந்துரை விலையாகத் தரமுடியும் என சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து பிடிவாதம் செய்து வருவதாலும், சர்க்கரைத் துறை ஆணையர் கூட்டிய கூட்டங்களில் தங்களுக்கு ஆகும் செலவு குறித்த விவரங்களை மட்டும் தெரிவிக்கும் நிறுவனங்கள், விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையைத் தருவதற்கான வழியைத் தெரிவிக்காமல் இருந்து வருகின்றன. மாநிலத் தொழில்துறை அமைச்சர்எம்.சி.சம்பத் தலைமையில் தொழில்துறைஅதிகாரிகள், சர்க்கரை ஆலை பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள் சங்கங்கள் ஆகியவை பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டாலும் தீர்வு ஏதும் கண்ட பாடில்லை.
தொடரும் வறட்சியால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வரும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக நிலுவைத் தொகை வைத்திருக்கும் சர்க்கரை ஆலைகள் மீதும் நடவடிக்கை இல்லை. நிலுவைத் தொகையை பெற்றுத் தருவதற்கான தீவிர நடவடிக்கையும் இல்லை என்கிறார் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. ராஜ்குமார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே இக்கோரிக்கை அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்து முதல்வரான ஓ. பன்னீர்செல்வத்திடமும், தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடமும் இப்பிரச்னை குறித்த விவரத்தை எடுத்துரைத்தோம். ஆனால், இதுவரை அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. சர்க்கரை ஆலைகள் முதலாளிகள், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு சர்க்கரை அதிகளவில் இறக்குமதியாகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலும் தேவை குறைவாக இருக்கிறது என்று ஏதேதோ காரணங்களைக் கூறுகின்றன.
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று கூறுகிறார்கள். ஆனால், தன் நிலத்தில் பயிரிட்ட கரும்புக்கான தொகையைப் பெறுவதற்காக பலநிலைகளில் போராடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்துக்காக பெரும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், நிலுவைத் தொகையை பெற இன்னும் எத்தனை காலம்தான் போராட வேண்டியிருக்குமோ என்கிறார் கே. ராஜ்குமார்.
கடைநிலை நுகர்வோராக இருக்கும் நமக்கு சர்க்கரை இனிக்கத்தான் செய்யும். ஆனால் அதன் உற்பத்தி மூலப்பொருளான கரும்பை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு சர்க்கரை கசக்கிறது. ஆம். கரும்பை நட்டு, பராமரித்து அறுவடை செய்து சர்க்கரை ஆலைகளிடம் அளித்துவிட்டு, நிலுவைத் தொகைக்காக காத்திருக்கும் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com