கேள்விக்குறியான நிலையில் மேட்டூர் அணை திறப்பு

ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தைக் கடந்தும் மேட்டூர் அணையில் நீர்மட்டம் மிகக் குறைவாக உள்ளதால் நிகழாண்டு டெல்டா மாவட்ட பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படுமா என்பதே கேள்விக்குறியாக
தஞ்சாவூர் மாவட்டம், கீழ வஸ்தா சாவடி அருகே சம்பா சாகுபடிக்காக உழுது தயார் நிலையில் உள்ள நிலம்.
தஞ்சாவூர் மாவட்டம், கீழ வஸ்தா சாவடி அருகே சம்பா சாகுபடிக்காக உழுது தயார் நிலையில் உள்ள நிலம்.

ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தைக் கடந்தும் மேட்டூர் அணையில் நீர்மட்டம் மிகக் குறைவாக உள்ளதால் நிகழாண்டு டெல்டா மாவட்ட பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
தொடர்ந்து ஆறாம் ஆண்டாக அணை திறப்பு தள்ளிப்போகிறது: டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். நீர்மட்டம் மிகக் குறைவாக இருந்ததால் 58 ஆம் ஆண்டாக நிகழாண்டும் ஜூன் 12-ஆம் தேதி அணை திறக்கப்படவில்லை. கடந்த 2012 ஆம் ஆண்டில் செப். 17-ஆம் தேதியும், 2013 ஆம் ஆண்டில் ஆக. 2-ஆம் தேதியும், 2014 ஆம் ஆண்டில் ஆக. 10-ஆம் தேதியும், 2015 ஆம் ஆண்டில் ஆக. 9-ஆம் தேதியும், 2016 ஆம் ஆண்டில் செப். 20-ஆம் தேதியும் திறக்கப்பட்டது. இதில், 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் அணைக்கு ஜூன் மாதத்தில் நீர்வரத்து இல்லாவிட்டாலும், ஜூலை மாதத்தில் உபரி நீர் வந்தது. இதனால், ஆகஸ்ட் மாதத்தில் அணை திறக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நீர்வரத்து பெரிய அளவுக்கு இல்லாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயரவில்லை. எனவே, மிகத் தாமதமாக செப். 20-ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து நிலவிய வறட்சியால் சம்பா சாகுபடியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டில் மேட்டூர் அணை திறக்கப்பட்டபோது நீர்மட்டம் 85.85 அடியாகவும், நீர் இருப்பு 48 டி.எம்.சி.யும் இருந்தது. ஆனால், அணையில் இப்போது திங்கள்கிழமை மாலை நிலவரப்படி நீர்மட்டம் 53.02 அடியும், நீர் இருப்பு 19.76 டி.எம்.சி.யும், நீர் வரத்து 4,860 கன அடியும்தான் உள்ளது.
அணையில் நீர்மட்டம் குறைந்தது 90 அடியும், நீர் வரத்து வினாடிக்கு குறைந்தபட்சம் 15,000 கன அடி வீதமும் இருந்தால்தான் டெல்டா மாவட்டம் முழுவதற்கும் சாகுபடி மேற்கொள்வதற்குப் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சம்பா சாகுபடிக்கு குறைந்தது 120 டி.எம்.சி.யாவது தண்ணீர் வேண்டும். வடகிழக்குப் பருவமழை கைக் கொடுத்தாலும் கூட, காவிரியில் 100 டி.எம்.சி. தண்ணீர் வந்தால்தான் சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமையும்.
ஆனால், இப்போது அணையில் 20 டி.எம்.சி.க்குள்தான் உள்ளது. அணைக்கு நீர்வரத்தும் குறைந்துவிட்டது. தென் மேற்கு பருவமழையும் இன்னும் 20 நாள்களுக்குத்தான் தொடரும் எனக் கூறப்படுகிறது. இச்சூழ்நிலையில் நிகழாண்டு சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பு என்பது கேள்விக்குறியான நிலையில் இருக்கிறது. பாசனத்துக்காகத் திறக்கப்பட்டாலும், டெல்டா மாவட்டங்களுக்குத் தண்ணீர் முழுமையாகக் கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். எனவே, அணை திறப்பு எப்போது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநர் பி. கலைவாணன் தெரிவித்தது: கர்நாடகத்தில் செப். 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் ஆக. 27, 28-ம் தேதிகளில் நல்ல மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இருந்தால் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அணையைப் பாசனத்துக்காகத் திறக்கலாம். அக்டோபர் 15-ம் தேதி வரை திறந்துவிட்டாலும் கூட அதன் பிறகு இங்கு வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிடும். ஆனால், சம்பா சாகுபடியில் இனிமேல் நாற்று விட்டு நடவு செய்வது என்பது இயலாதது. எனவே, நேரடி விதைப்பு செய்தால் மட்டுமே சம்பா சாகுபடியில் சாத்தியமாகும் என்றார்.
டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவத்தில் இயல்பாக 4 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். தண்ணீர் இல்லாத நிலையில் ஏறத்தாழ 3.50 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்னும் சம்பா சாகுபடி குறித்த தயக்கம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. எனவே, நிகழாண்டும் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு வடகிழக்குப் பருவமழையையே முழுமையாக நம்பி உள்ளனர்.
15 டி.எம்.சி.மட்டுமே வந்தது
கர்நாடகத்திடமிருந்து மேட்டூர் அணைக்கு ஜூன், ஜூலை மாதங்களில் 44 டி.எம்.சி.-ம், ஆகஸ்ட் மாதத்தில் 50 டி.எம்.சி.ம் தண்ணீர் வர வேண்டும். ஆனால், நிகழாண்டு மேட்டூர் அணைக்கு ஜூன் முதல் இதுவரை ஏறத்தாழ 15 டி.எம்.சி. மட்டுமே வந்துள்ளது. இதில், பெரும்பாலும் மழை நீர்தான் வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com