ஜிஎஸ்டி விலக்கு வரம்பை ரூ.50 லட்சமாக அதிகரிக்க வேண்டும் : வணிகர்கள் வலியுறுத்தல்

ஜிஎஸ்டி ஆண்டு விற்றுமுதல் விலக்கு வரம்பை ரூ.50 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என தென் மாநில வணிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி ஆண்டு விற்றுமுதல் விலக்கு வரம்பை ரூ.50 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என தென் மாநில வணிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆலோசனைக் கூட்டம்: சரக்கு -சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பில் மாற்றம் செய்ய வலியுறுத்துவது தொடர்பாக, தென் மாநில வணிகர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக.22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார், லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வணிகர்களுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து ஆண்டு விற்றுமுதல் விலக்கு உச்ச வரம்பை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும்; ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும்; இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். சாதாரண பேக்கரிகளில் தயாராகும் பிஸ்கட், மிட்டாய், கடலை மிட்டாய் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதம் என்பதை மாற்றி வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும். மருந்துகளுக்கான வரிவிதிப்பு 12 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியது: ஜிஎஸ்டி-இல் மாற்றங்கள் செய்வது தொடர்பாக மத்திய நிதியமைச்சரை தில்லியில் அடுத்த வாரம் சந்தித்து வணிகர்களின் குறைகள் குறித்து பேசவுள்ளோம்.
வரும் செப்டம்பர் 9 -ஆம் தேதி ஹைதராபாதில் வணிகர்களுக்கான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் சரியான தீர்வுகள் ஏற்பட வேண்டும். தவறும்பட்சத்தில் தென் மண்டலம் சார்பில் 10,000 வணிகர்களைத் திரட்டி, புது தில்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com