ஆளில்லா கடவுப் பாதையை கடக்க முயன்ற டிராக்டர் மீது ரயில் மோதல்

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே ஆளில்லா கடவுப்பாதையை கடக்க முயன்ற டிராக்டர் மீது பயணிகள் ரயில் புதன்கிழமை மோதியது. இதில் டிப்பர் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தது
டிராக்டர் மீது மோதியதில் சேதமடைந்த ரயில் என்ஜின்.
டிராக்டர் மீது மோதியதில் சேதமடைந்த ரயில் என்ஜின்.

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே ஆளில்லா கடவுப்பாதையை கடக்க முயன்ற டிராக்டர் மீது பயணிகள் ரயில் புதன்கிழமை மோதியது. இதில் டிப்பர் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பி கிராமத்தில் ஆளில்லாத ரயில்வே கடவுப்பாதை உள்ளது. புதன்கிழமை பகல் 11.50 மணியளவில், ஏரியில் இருந்து மண் ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் ஒன்று, இந்த கடவுப்பாதையை கடந்து செல்ல முயன்றது. டிராக்டரை, பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் துரைமுருகன் என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது, அந்த இருப்புப்பாதை வழியாக சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி பயணிகள் ரயில் வந்து கொண்டு இருந்தது. ரயில் வருவதற்குள் கடவுப்பாதையை கடந்து செல்ல டிராக்டர் முயன்றது. இதனைக் கவனித்த ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்த முயன்றார். அதற்குள், அந்த ரயில் டிராக்டர் மீது வேகமாக மோதியது. இதில், டிராக்டரின் பின்பகுதியான டிப்பர், மண் பாரத்துடன் பல அடி தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டது. அதன் சக்கரங்கள் கழன்று ஓடின. சின்னசேலம் ரயில் நிலையத்துக்கு ஒரு கி.மீ. தொலைவுக்கு முன்னதாக நிகழ்ந்த இந்த விபத்தில், அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்தில் ரயில் என்ஜின் கடுமையாக சேதமடைந்து பழுதாகி நின்றது. அப்போது, சின்னசேலம் ரயில் நிலையத்தில் பெங்களூர் செல்லும் ரயில் நின்று கொண்டிருந்தது. அந்த ரயில் என்ஜினைக் கொண்டு, விபத்துக்குள்ளான ரயில் சின்னசேலம் ரயில் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதற்கு மேல் அந்த ரயில் விருத்தாசலத்துக்கு இயக்கப்படவில்லை. அதில் வந்த பயணிகள், பேருந்துகள் மூலம் தங்கள் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com