எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியல் வெளியீடு: 2,224 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி 2,224 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள்
தரவரிசைப் பட்டியலை வெளியிடும் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்.
தரவரிசைப் பட்டியலை வெளியிடும் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி 2,224 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
51 ஆயிரம் விண்ணப்பம்: தமிழகத்தில் மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவப் (பிடிஎஸ்) படிப்புகளில் அரசு இடங்களுக்கு 31,629 விண்ணப்பங்களும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 20,244 விண்ணப்பங்களும் என மொத்தம் 51,873 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் அரசு இடங்களுக்கு 27,212 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 18,040 விண்ணப்பங்களும் தகுதியானவை.
மொத்த இடங்கள்: தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,445, ராஜா முத்தையா கல்லூரியில் 127, அகில இந்திய ஒதுக்கீடு போக மீதம் சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள் 102, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 860 என மொத்தம் 3,534 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதுதவிர 592 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
பல் மருத்துவத்தைப் பொருத்தவரை அரசு கல்லூரியில் 85, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 68, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,045 என மொத்தம் 1,198 அரசு பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதுதவிர, 715 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
தரவரிசைப் பட்டியல்: தகுதி பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ, தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


ஓசூர் மாணவர் முதலிடம்: தரவரிசைப் பட்டியலில் 23,830 பேர் மாநிலப்பாடத் திட்ட மாணவர்கள், 3,382 பேர் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்கள். அதில் அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த சிபிஎஸ்இ மாணவர் ஆர்.சந்தோஷ், நீட் தேர்வில் 656 மதிப்பெண் பெற்று தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். கோவை பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்த மாநிலப் பாடத்திட்ட மாணவர் ஜி.எம். முகேஷ் கண்ணா, நீட் தேர்வில் 655 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், திருச்சியைச் சேர்ந்த மாநிலப் பாடத்திட்ட மாணவர் இசட். சையத் ஹஃபீஸ் 651 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
முதல் 20 இடங்களில் 15 சிபிஎஸ் இ மாணவர்கள்: முதல் 20 இடங்களைப் பெற்றவர்களில் 15 பேர் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்கள், 5 பேர் மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள்.
2,224 இடங்களுக்கு வாய்ப்பு: மொத்தமுள்ள 3,534 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களில் சுமார் 63 சதவீத இடங்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது: மொத்தம் உள்ள அரசு இடங்களில் சுமார் 2,224 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும், 1,310 இடங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
இன்று முதல் கலந்தாய்வு: மருத்துவக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக.24) முதல் தொடங்க உள்ளது. முதல்நாளில் விளையாட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்குக் கலந்தாய்வு நடைபெறும். இதில் பங்கேற்க 48 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் காலை 11 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் தொடங்கும். கலந்தாய்வில் பங்கேற்பதற்காக தொலைபேசி மூலமும், குறுந்தகவல் மூலமும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கிடைக்கப் பெறாதோர் தரவரிசை மற்றும் கலந்தாய்வு அட்டவணையின் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இடைவிடாமல் கலந்தாய்வு: செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விநாயகர் சதுர்த்தி, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட அனைத்து விடுமுறை தினங்களில் கூட இடைவிடாமல் கலந்தாய்வு நடைபெறும்.
ஒரே நேரத்தில் இடங்கள் தேர்வு: அரசு இடங்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வின்போது, கலந்தாய்வு அரங்கில் உள்ள திரையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விவரங்களும் இடம்பெறும். ஒருவேளை எதிர்பார்த்த அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள், விருப்பப்பட்டால் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அப்போதே தேர்வு செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com