சசிகலாவின் மறுஆய்வு மனு தள்ளுபடி

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத் தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரி அதிமுக தாற்காலிக பொதுச் செயலாளர்
சசிகலாவின் மறுஆய்வு மனு தள்ளுபடி

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத் தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரி அதிமுக தாற்காலிக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர் சுதாகரன், சசிகலாவின் சகோதரரது மனைவி இளவரசி ஆகியோருக்கு எதிராக கடந்த 1996-ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர்கள் 4 பேரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்து கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் 2015-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது. இதனிடையே, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா உயிரோடு இல்லாததை சுட்டிக்காட்டி, அவரை விடுவித்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் பெங்களூரு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறைத் தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் ஆகியவற்றை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
எனினும், இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யகோரி, உச்ச நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, அமிதவா ராய் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, எழுத்துப்பூர்வமான மனுக்களை அளித்தார்.
இதையடுத்து, அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அதை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இருப்பதாக தெரியவில்லை; மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரும் அளவுக்கு, தீர்ப்பு ஆவணத்தில் சிறிதளவு கூட பிழை இல்லை. எனவே மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com