அதிமுகவினரே ஆட்சியை கவிழ்த்து விடுவர்: மு.க.ஸ்டாலின்

தற்போதைய அதிமுக அரசை திமுக கவிழ்க்காது, ஆனால், அதிமுகவினரே ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பண்ருட்டி ஒன்றியம், மேல்காங்கேயன்குப்பத்தில் திமுகவினரால் தூர்வாரப்பட்ட காசாம்பு ஏரியில் திங்கள்கிழமை மீன் குஞ்சுகளை விடுகிறார் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
பண்ருட்டி ஒன்றியம், மேல்காங்கேயன்குப்பத்தில் திமுகவினரால் தூர்வாரப்பட்ட காசாம்பு ஏரியில் திங்கள்கிழமை மீன் குஞ்சுகளை விடுகிறார் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

தற்போதைய அதிமுக அரசை திமுக கவிழ்க்காது, ஆனால், அதிமுகவினரே ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டம், விவசாயிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் என பல போராட்டங்கள் நடைபெற்றாலும் ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவே போராடுகிறார்கள். தற்போதைய தமிழக அரசு நமது உரிமைகளை தில்லியில் அடமானம் வைத்துள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதன் மீது அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். அதேவேளையில், அதிமுக எம்எல்ஏக்கள் 40-க்கும் மேற்பட்டோர் தன்னிடம் இருப்பதாக தினகரன் கூறி வருகிறார். எனவே, சட்டப் பேரவையைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க திமுக எப்போதும் விரும்பியதில்லை. மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஜனநாயக ரீதியில் மட்டுமே ஆட்சியமைக்கும். தற்போதைய அதிமுக அரசை திமுக கவிழ்க்காது. ஆனால், அதிமுகவினரே ஆட்சியை கவிழ்த்துவிடுவர். அதன் பின்னர் நடைபெறும் தேர்தலில் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியமைக்கும்.
தமிழகத்தில் போதைப் பொருள்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது என சட்டப் பேரவையில் கூறியபோது, அதற்கு ஆதாரம் கேட்கப்பட்டது. இதனால், கடைகளில் விற்கப்படும் போதைப் பொருள்களை சட்டப் பேரவையில் காண்பித்தோம். இதற்காக எங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களாம். ஆனால், இந்தப் பொருள்களை விற்பதற்கு சுகாதாரத் துறை அமைச்சர், காவல் துறை அதிகாரி ஆகியோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.
திராவிட இயக்கத்தை சிலர் ஒழித்துவிடுவதாக கூறி வருகின்றனர். திராவிட இயக்கங்கள் தொடங்கப்படாமல் இருந்திருந்தால் அனைவருக்கும் கல்வி கிடைத்திருக்காது. இந்த இயக்கத்தை யாராலும் தொடக்கூட முடியாது என்றார் மு.க.ஸ்டாலின்.
அப்போது, கிழக்கு மாவட்ட திமுக செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்எல்ஏக்கள் சபா.ராஜேந்திரன், துரை கி.சரவணன், நெல்லிக்குப்பம் புகழேந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஏரியைப் பார்வையிட்டார்: பண்ருட்டி ஒன்றியம், மேல்காங்கேயன்குப்பத்தில் உள்ள காசாம்பு ஏரியை, நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் மற்றும் திமுகவினர் இணைந்து ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரினர். இந்த ஏரியை மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர், ஏரியில் மீன் குஞ்சுகளை விடுவித்த அவர், கரையோரத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி, அவைத் தலைவர் ராஜா, மாவட்ட பிரதிநிதிகள்ஆடலரசு, லட்சுமிநாராயணன், சபா.பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அங்கிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் கருக்கை, விசூர் பகுதிகளில் தூர்வாரப்பட்ட ஏரிகளையும் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com