செப்டம்பர் 12-இல் அதிமுக பொதுக் குழு, செயற்குழு

அதிமுகவின் பொதுக் குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையில் வரும் செப்டம்பர் 12-இல் கூடவுள்ளது.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்.

அதிமுகவின் பொதுக் குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையில் வரும் செப்டம்பர் 12-இல் கூடவுள்ளது.
இது தொடர்பாக அதிமுக (அம்மா, புரட்சித் தலைவி அம்மா) தலைமைக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுக உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, கட்சியின் சட்ட திட்ட விதிகள் படி, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
மதுசூதனன் தலைமையில்...:சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெறும்.
கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்படும். உறுப்பினர்கள் அழைப்பிதழோடு கலந்து கொள்ள வேண்டும்.
யார், யார் பங்கேற்கலாம்?: அதிமுக அமைப்புத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சிக் கழக செயலாளர்கள், பிற மாநில அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கலாம்.
மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், புதுவை உள்ளிட்ட பிற மாநிலங்களில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
ஜெயலலிதா நியமித்தோர்...:பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டோருக்கு மட்டுமே அனுமதி என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
டிடிவி தினகரன் அறிவிப்புகள் செல்லாது: அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், செய்தித் தொடர்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து டிடிவி தினகரன் கடந்த 10-ஆம் தேதி நீக்கப்பட்டார். அதுகு றித்த விரிவான விளக்கம் அப்போதே வெளியிடப்பட்டது. கட்சியின் சட்ட விதிக்கு விரோதமாக டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டாலும், அதிமுக நிர்வாகிகளுள் ஒருவராக அவரை ஏற்க இயலாது என கடந்த மார்ச்சில் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் செயல்பட முடியாது என்பதை விளக்கி, அவரை கட்சியின் எந்தவொரு நிர்வாகப் பொறுப்பிலும் ஏற்க இயலாது என அதிமுக நிர்வாகிகள் தரப்பில் கடந்த 10-ஆம் தேதி அன்றே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இடைக்கால ஏற்பாடு: அதிமுக பொதுச் செயலாளராக ஓர் இடைக்கால ஏற்பாடாக நியமிக்கப்பட்ட வி.கே.சசிகலாவின் நியமனத்தைத் தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. அவரால் துணைப் பொதுச் செயலாளராக ஒருவர் நியமிக்கப்படுவதும், அப்படி நியமிக்கப்பட்டவர் கட்சிப் பணிகளில் ஈடுபடுவதும் முற்றிலும் கட்சியின் சட்ட விதிகளுக்குப் புறம்பானது.
எனவே, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளையும், கட்சி அமைப்புத் தேர்தல்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகளையும் நீக்கவோ, புதிதாக பொறுப்புகளுக்கு சிலரை நியமிக்கவோ டிடிவி தினகரனுக்கு எந்தவித உரிமையோ, தகுதியோ கிடையாது.
டிடிவி தினகரனின் அறிவிப்புகள் கட்சியின் செயல்பாடுகளை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. அத்தகைய அறிவிப்புகள் செல்லத்தக்கவை அல்ல.
ஜெயலலிதாவால் கட்சிப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்களும், கட்சி அமைப்புத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தங்களது பொறுப்புகளில் தொடர்ந்து செயல்படுவார்கள் என்பதை இந்தக் கூட்டம் உறுதி செய்கிறது என்று முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை அமைச்சர் டி.ஜெயக்குமார் முன்மொழிந்தார். கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் அதனை வழிமொழிந்தனர்.
இதர தீர்மானங்கள்: ஜெயலலிதாவின் அயராத முயற்சியாலும், அதிமுக உறுப்பினர்கள் லட்சக்கணக்கானோரின் பங்களிப்பாலும் ஜெயா டி.வி.யும், டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேடும் தொடங்கப்பட்டன. கட்சியின் சொத்துகளான அவை இரண்டும் செயல்படுவதை உறுதி செய்ய சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன் முன்மொழிந்தார்.
அதிமுக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். எனவே, கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை உடனடியாகக் கூட்டுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்மொழிந்தார்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், இனிவரும் காலங்களிலும் ஜெயலலிதாவின் வழியில் கட்டுக் கோப்பாகச் செயல்பட்டு அதிமுகவையும், அரசையும் காப்பாற்ற இயன்றது அனைத்தையும் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று நான்காவது தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை பி.எச். மனோஜ் பாண்டியன் முன்மொழிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com