உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக அமைச்சர், நிர்வாகிகள் சந்திப்பு

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தில்லியில் இன்று காலை 9.40 மணியளவில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், மக்களவை துணை சபாநாயகர்
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக அமைச்சர், நிர்வாகிகள் சந்திப்பு


புதுதில்லி: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தில்லியில் இன்று காலை 9.40 மணியளவில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்பி.மைத்ரேயன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் இணைந்துள்ள நிலையில், அதிமுக சின்னம், பெயரை மீட்பதற்காக ஆலோசனை நடத்துவதற்காக இவர்கள் தில்லி வந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், நேற்று செவ்வாய்கிழமை தில்லியில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் (மீன்வளத் துறை) , பி. தங்கமணி (மின் துறை), சி.வி. சண்முகம் (சட்டத் துறை), மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

இதையடுத்து இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக அமைச்சர்கள், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்பி.மைத்ரேயன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் மு.தம்பிதுரை கூறுகையில், நேற்று மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தோம். அதையடுத்து மரியாதை நிமித்தமாக ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்தோம். தமிழகத்தின் நலன்களுக்காகவே மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறோம். தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து பல்வேறு துறைகள் மூலமாக ரூ.17 ஆயிரம் கோடி நிதி வர வேண்டியுள்ளது. அதைப் பெறுவது தொடர்பாக நிதியமைச்சர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம் என்றார்.

மேலும், அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது. ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் கிடையாது. இரட்டை இலை சின்னம் அதிமுகவினுடையது. கருத்து வேறுபாடுகள் கலைந்து சிறப்பாக செயல்படுவோம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com