மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும்

காலியாக இருக்கும் ஆளுநர் பதவிகள் நிரப்பப்பட்ட பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும்

காலியாக இருக்கும் ஆளுநர் பதவிகள் நிரப்பப்பட்ட பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: 
சுதந்திரத்துக்கு முன் நாம் ஆட்சிக்காக பாடுபட்டோம். இப்போது ஊழல் இல்லாத நல்ல ஆட்சிக்காக பாஜக பாடுபடுகிறது. நாட்டில் அமைதி இருந்தால் தான், வளர்ச்சி ஏற்படும். அத்தகைய அமைதியான, ஒற்றுமையான, தூய்மையான பாரதத்தை உருவாக்கும் வகையில் பிரதமரின் செயல்பாடுகள் தொடர்ந்து வருகிறது.
இந்தியா - சீனா எல்லையான டோக்கோலாமில் கடந்த 70 நாள்களாக பதற்றம் இருந்து வந்தது. இந்திய அரசின் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக, சுமுக நிலை ஏற்பட்டு, இரு தரப்பும் தற்போது படைகளை திரும்பப் பெற்றுள்ளன. 
மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வெங்கய்ய நாயுடு, மனோகர் பாரிக்கர்ஆகியோர் குடியரசு துணைத் தலைவர், கோவா முதல்வர் பதவிகளை ஏற்றுள்ளதாலும், ஒரு அமைச்சரின் மறைவாலும், மூன்று முக்கிய இலாகாக்களுக்கு அமைச்சர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆளுநர்கள் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்த பின்னர், மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். 
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி கலந்து கொண்டுள்ளது. மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது. அதிமுகவைப் பொருத்த வரை இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்போது, அந்த தலைமைக்கு இணைக்கமாக அதிமுக ஒன்றுபட வாய்ப்புள்ளது.
தற்போதைய அதிமுக அரசின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. உட்கட்சி பிரச்சினையால் இந்த தேக்கம் ஏற்பட்டு இருக்கலாம். அதிமுகவில் நடக்கும் குழப்பத்திற்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 
உச்ச நீதிமன்றம் ஆதார் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தனிமனித சுதந்திரம் என்பது குறித்துத் தான் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒருவரது ஆதார் எண்ணை வெளியில் செல்வதால், எந்த உரிமையும் பாதிக்கப்படாது. மாறாக உரிமை பாதுகாக்கப்படும்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பிரதமரை சந்திக்க வேண்டும் என பத்திரிகையில் அறிக்கை வெளியிட்டால், அதைப் பார்த்து பிரதமர் அவரை அழைக்க மாட்டார். அவர் யாரையும் சந்திக்க மறுப்பதில்லை. முறைப்படி அணுகினால் பிரதமரைச் சந்திக்க முடியும்.
அதேபோல உண்மையான விவசாயப் பிரதிநிதிகளை பிரதமர் எப்போதும் சந்திப்பார். தில்லியில் போராடுபவர்களை விவசாயிகளின் பிரதிநிதியாக நான் கருதவில்லை.
19 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுகவினர் கொடுத்த மனு மீது சட்டரீதியாக ஆளுநர் விசாரிப்பார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பின்னணியாகச் செயல்படுகிறாரா என்று தெரியாது. அவர் எதைச் சொன்னாலும் பகிரங்கமாக, வெளிப்படையாகத்தான் சொல்வார் என்றார்.
பேட்டியின்போது பாஜக மாநில பிரசார அணி பொறுப்பாளர் ஆ.சரவணன், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவ.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் ஏ.பி.கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com