அதிமுகவை கூறுபோட அனுமதிக்க மாட்டோம்: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி சூளுரை

சுயநலத்துக்காக அதிமுகவை கூறு போட ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சூளுரைத்தார்.
சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு செங்கோலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாளும்  வழங்கிய அதிமுகவினர்.
சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு செங்கோலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாளும் வழங்கிய அதிமுகவினர்.

சுயநலத்துக்காக அதிமுகவை கூறு போட ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சூளுரைத்தார்.
கட்சியைப் பாதுகாக்க, அனைவரும் ஓரணியில் நிற்போம் எனவும், அதற்காக எந்தத் தியாகமும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம் எனவும் முதல்வர் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் எம்.ஜி.ஆர். உருவப் படத்தைத் திறந்து, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:-
காஞ்சித் தலைவனின் பெயரைத் தாங்கி அதிமுக எனும் இயக்கம் வளர்ந்திருக்கிறது. இதனை எந்தச் சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது. அதிமுகவைப் பாதுகாக்க, அதிமுகவினர் அனைவரும் ஓரணியில் நிற்போம். அதற்காக எந்தத் தியாகம் செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கூறுபோட விட மாட்டோம்: சுயநலத்துக்காக, அதிமுகவை கூறுபோட ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம். பேரறிஞர் அண்ணா பிறந்த இந்தப் புனித மண்ணில் இருந்தபடி சபதம் ஏற்கிறோம். மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் இன்றைக்கு ஏராளமான திட்டங்களை செய்து முடித்திருக்கிறோம். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கண்ட கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
சிலரின் கனவு பலிக்காது: ஜெயலலிதாவின் அரசு சிறப்பான ஆட்சியைத் தந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவை நனவாக்குவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு இந்த அரசு செயல்படுகிறது. 
இந்த அரசை எப்படியாவது வீழ்த்திவிடலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொல்லைப்புறத்தின் வழியாக ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு கண்டால் அதுஒரு போதும் நடக்காது.
இந்தக் கட்சியை எம்.ஜி.ஆர். உருவாக்கும் போது, எவ்வளவு பேச்சுகள், துன்பங்களுக்கு ஆளானார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் ரத்தம் சிந்தி கட்சியை உருவாக்கியிருக்கிறார். அதைக் கட்டிக்காத்த பெருமை ஜெய
லலிதாவைச் சேரும். இரவு, பகல் பாராமல் உழைத்து, தன் உயிரையே இந்த மண்ணிலே விட்டு, கட்சிக்கும், ஆட்சிக்கும் தியாகம் செய்த ஒரே தலைவி ஜெயலலிதாதான். வாழ்நாள் முழுவதும் அந்த இருபெரும் தலைவர்களும் மக்களுக்காக உழைத்து கட்சியையும், ஆட்சியையும் காத்திருக்கிறார்கள்.
தலைவர்கள் அளித்துள்ள வலிமை: அவர்களுடைய எண்ணத்தை நிறைவேற்றுவதே அத்தனை தொண்டர்களின் லட்சியம் என்பதை இந்த நேரத்தில் சூளுரையாக ஏற்போம். அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் தவிடுபொடியாக்கி அதை சாதித்துக் காட்டக் கூடிய ஆற்றல், வலிமையை இரு தலைவர்களும் நமக்கு தந்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த ஆட்சியையோ, கட்சியையோ ஒருபோதும் அசைக்க முடியாது. இரண்டாவது முறையாக தொடர்ந்து ஜெயலலிதா தனது ஆட்சியை தக்க வைத்து, நம்மிடம் தந்துள்ளார். இப்போது ஒரு மகத்தான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எதற்கும் அஞ்ச மாட்டோம்: எங்கே உழைப்பு இருக்கிறதோ அங்கே உண்மை இருக்கும். அந்த உண்மை வெல்லும். நாம் எதற்கும் அஞ்சப் போவதில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருதலைவர்கள் காட்டிய பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். நம்முடைய ஆட்சியும், கட்சியும் இந்த மண்ணிலே நிலைத்து நிற்கும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
முன்னதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் முன்னிலை உரையாற்றினர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றுப் பேசினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா நன்றி தெரிவித்தார்.
விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
நான்கு அமைச்சர்கள்: பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக தில்லி சென்றுள்ள அமைச்சர்கள் தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை. அதேசமயம், பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விழாவில் கலந்து கொள்ளவில்லை. மொத்தம் 29 அமைச்சர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர்.
குடும்ப ஆட்சிக்கு இடமில்லை: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தில் புதன்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அவர் ஆற்றிய முன்னிலை உரை: இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி. இது ஏழை, எளியவர்களுக்கான ஆட்சி. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைக்கும் ஆட்சி.
எந்த நோக்கத்துக்காக அதிமுக எனும் கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினாரோ, எந்த நோக்கத்துக்காக ஜெயலலிதா இந்த கட்சியைக் கட்டிக் காத்தாரோ அந்த மகத்தான தலைவர்களின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்காக நடைபெறுகின்ற ஆட்சியாகும் இது.
நமக்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் கேடயமாக, வீழ்த்துகின்ற வாளாக நமக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்தான்.
அவர்களின் நல்லாசிகள் இருக்கும் வரை இந்தப் பொற்கால ஆட்சியின் புகழ் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். விசுவாசத் தொண்டர்களின் துணையோடு, வெற்றி நடைபோடும் இந்த அரசு ஒரு எஃகுக் கோட்டை. ஏழை எளியவர்களைப் பாதுகாக்கும் இரும்புக் கோட்டை. இந்தக் கோட்டையிலே குடும்ப ஆட்சிக்கு இடமில்லை. ஊழல் ஆட்சிக்கும், அராஜக ஆட்சிக்கும் இடமில்லை. இது மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சி. விசுவாசத் தொண்டர்களின் ஆட்சி. உண்மையான மக்களாட்சி.
எங்களை நம்பியவர்கள் யாரும் கெட்டுப் போக மாட்டார்கள். கெட்டுப் போக விட மாட்டோம். எம்.ஜி.ஆரின் கொள்கை வழியிலே, ஜெயலலிதாவின் புனிதப் பாதையிலே நின்று மக்கள் பணியாற்றுவோம் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com