பேரவைத் தலைவர் நோட்டீஸுக்கு டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் பதில்: பேரவைச் செயலரிடம் மனுவாக அளித்தனர்

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேரும் தங்களது விளக்கத்தை பேரவைச் செயலாளர் பூபதியிடம் அளித்தனர்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேரும் தங்களது விளக்கத்தை பேரவைச் செயலாளர் பூபதியிடம் அளித்தனர்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்ற வேண்டுமென ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் கடிதம் அளித்தனர். இது குறித்து, அரசு கொறடா ராஜேந்திரன், பேரவைத் தலைவர் பி.தனபாலிடம் புகார் அளித்திருந்தார். இந்தப் பிரச்னை குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென 19 பேருக்கும் பேரவைத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, 19 எம்.எல்.ஏ.,க்களும் தங்களது பதிலை புதன்கிழமை அளித்தனர். பதிலளிப்பதற்காக பேரவை உறுப்பினர்கள் ஏழுமலை, தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் புதுச்சேரியில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு புதன்கிழமை வந்தனர்.
மாலை 5.30 மணியளவில் பேரவைத் தலைவர் அறைக்கு அவர்கள் சென்றனர். அவர் அங்கு இல்லாத காரணத்தால், பேரவைச் செயலாளர் (பொறுப்பு) பூபதியை சந்தித்து, பேரவைத் தலைவர் அளித்த நோட்டீஸுக்கான பதிலை கொடுத்தனர். இவர்கள் 3 பேர் தவிர மற்ற 16 எம்.எல்.ஏ.க்களுக்கான பதில் மனுவை அவர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் கொடுத்தனர்.
பின்னர் அங்கிருந்த நிருபர்களுக்கு தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி விவகாரம். அதில் தலையிட முடியாது. அவர்களே பேசி முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஆளுநர் கூறியிருக்கிறார்.
ஆளுநரே எங்களுக்கு தண்டனை கொடுக்காத நிலையில் பேரவைத் தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ஆளுநரை நீங்கள் எப்படிச் சந்திக்கலாம், பத்திரிகையாளர்களுக்கு எப்படி பேட்டி அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் என்ன நியாயம் இருக்கிறது?
பேரவைத் தலைவர் அனுப்பிய நோட்டீஸþக்கு நாங்கள் பதில் அளித்துள்ளோம். அதில், அந்த நோட்டீஸ் எந்த விதத்திலும் எங்களைக் கட்டுப்படுத்தாது. அந்த நோட்டீஸை சட்ட முறைப்படி அனுப்பவில்லை. இதில் இன்னும் 2 நாள்களில் நல்ல முடிவு தெரியும் என்று நினைக்கிறோம். இல்லாவிட்டால் நாங்கள் அனைவரும் குடியரசுத் தலைவரை மிகவிரைவில் சந்தித்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.
எங்களிடம் 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். அவர்களின் பெயரை வெளியிட முடியாது. ஆளுநரை பார்க்கக் கூடாது என்று கொறடா ஏற்கெனவே உத்தரவு போட்டு, அதை மீறி நாங்கள் ஆளுநரைச் சந்தித்திருந்தால்தான் குற்றச்சாட்டு எழும். ஆனால் இதில் அப்படி எதுவும் நடக்கவில்லையே.
எங்களை நீக்க இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்யும்போது, அதற்கு எதிராக 12 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். கொறடாவின் உத்தரவையும் மீறி வாக்களித்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிந்தனை செய்யவே இல்லை. ஆனால் மாறாக அவர்களை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டனர்.
எடப்பாடி கே.பழனிசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் ஊழல் குற்றச்சாட்டு சொன்னபோதும், அவருக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தபோதும் ஏன் அவருக்கு எதிராக கொறடா நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை? அப்படிப்பட்டவர்களை ஆட்சியில் அமர வைத்துள்ளனர். இன்னும் 2 அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வரவிருக்கிறது.
ஆட்சியில் பங்கு வகிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அன்றைக்கே பதவிக்கு சசிகலா குடும்பத்தில் இருந்து ஒருவர் வந்திருக்க முடியும். பதவியை நாடி நிற்கும் குடும்பம் அவர்கள் குடும்பம் அல்ல. ஜெயலலிதாவுக்காக வாழ்ந்த தியாகக் குடும்பம் அது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எங்களுக்கு அழைப்பு வரவில்லை என்று கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com