வேட்பு மனு நிராகரிப்பு: தேர்தல் அலுவலகம் முன்பு நடிகர் விஷால் தர்ணா; பரபரப்பு! 

வேட்பு மனு நிராகரிப்பு: தேர்தல் அலுவலகம் முன்பு நடிகர் விஷால் தர்ணா; பரபரப்பு! 

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, நடிகர் விஷால் தேர்தல் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.   

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, நடிகர் விஷால் தேர்தல் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.   

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி டி.டி.வி. தினகரன் அணி, ., நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்களின் பரிசீலனை இன்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரியால் நடத்தப்பட்டது. அதில் திமுகவின் மருது கணேஷ், அதிமுகவின் மதுசூதனன் மற்றும் டிடிவி தினகரன் மற்றும் பாஜக வேட்பாளர் நாகராஜன் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஆனால் நடிகர் விஷாலின் மனு மீதான பரிசீலனை நடைபெற்ற பொழுது திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் எதிர்ப்பு தெரிவித்தனர். வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் பல விவகாரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல்வேறு விவரங்கள் தவறாக கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அத்துடன் விஷால் ஆர்.கே.நகரில் குடியிருப்பதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் அவரது மனுவினை முன்மொழிந்தவர்கள் பெயர் ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில்  இடம்பெறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக அங்கு குழப்பம் நிலவியது. இறுதியில் விஷால் வேட்பு மனுபரிசீலனை தற்பொழுது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இன்று மாலை தேர்தல் பார்வையாளர்கள் முன்னலையில் பரிசீலனை மீண்டும் நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.     

அதன்படி தற்பொழுது நடைபெற்ற பரிசீலனையில் நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

பொதுவாக ஒரு வேட்பாளரின் மனுவினை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் உள் 10 பேர் முன்மொழிய வேண்டும். ஆனால் விஷாலின் மனுவினை முன்மொழிந்தவர்கள்ல் இருவரது பெயர்கள் ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில்  இடம்பெறவில்லை; எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி விளக்கமளித்தார்

இதனைத் தொடர்ந்து விளக்கம்கேட்பதற்காக தேர்தல் அலுவலகத்துக்கு நடிகர் விஷால் வருகை தந்தார். அங்கு அவருக்குக் கிடைத்த விளக்கம் திருப்தி அளிக்காததால் வெளியில் வந்த அவர் உடனடியாக தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தின் முன்பு தரையில் அமைந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாதா? எனது தேர்தல் மனுவினை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்; அதற்கு ஆதாரம் உள்ளது' என்று தெரிவித்தார்.

உடனடியாக அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் விஷாலை சமாதானம் செய்து தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியதனை அடுத்து, போராட்டத்தை அவர் கைவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com