வேட்பு மனு நிராகரிப்பு: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியுடன் நடிகர் விஷால் சந்திப்பு! 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை நடிகர் விஷால் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். 
வேட்பு மனு நிராகரிப்பு: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியுடன் நடிகர் விஷால் சந்திப்பு! 

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை நடிகர் விஷால் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.   

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி டி.டி.வி. தினகரன் அணி, ., நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்களின் பரிசீலனை செவ்வாயன்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரியால் நடத்தப்பட்டது. அதில் திமுகவின் மருது கணேஷ், அதிமுகவின் மதுசூதனன் மற்றும் டிடிவி தினகரன் மற்றும் பாஜக வேட்பாளர் நாகராஜன் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஆனால் நடிகர் விஷாலின் வேட்பு மனுவானது பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டதாக செவ்வாய் இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது. விஷாலின் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்த 10 பேரில் இருவர் தாங்கள் கையெழுத்திடவில்லை என மறுத்ததாகவும், வங்கிக் கணக்கு விவரங்கள், தவறான குடியிருப்பு முகவரி உள்ளிட்ட காரணங்களால் மனு நிராகரிக்கப்படுவதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் விஷால் புதன்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறியதாவது:

என்னுடைய வேட்பு மனுவானது திட்டமிட்டே நிராகரிக்கப்பட்டுள்ளது.எனது மனுவினை முன்மொழிந்தவர்கள் கடுமையாக மிரட்டப்பட்டதன் காரணமாகவே பின்வாங்கியுள்ளார்கள். இனி எதிர்காலத்தில் நான் கவனமாக இருப்பேன்.

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி என்னுடைய மனு பரிசீலனையில் பொழுது அறையை விட்டு அடிக்கடி வெளியே சென்று தொலைபேசியில் பேசினார். நான் அவரிடம் நீங்கள்தான் முடிவு செய்யுமிடத்திலிருக்கிறீர்கள்.வேறு யாரிடமும் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தேன்.ஆனால் அவ்வாறு அவர் பேசிய பிறகே, என் மனு நிராகரிப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது 

எனக்கு இழைக்கப்பட்டுள்ள தவறுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். எனக்காக மட்டும் அல்ல; இது ஜனநாயகத்திற்கே ஏற்பட்ட அநீதி. அதிகாரியை மாற்றுவது மட்டுமே தீர்வாகாது. எனக்கு தெளிவான விளக்கம் வேண்டும்.

இவ்வாறு நடிகர் விஷால் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.  

அதே சமயம் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியான வேலுச்சாமி இன்று மாலை தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை தலைமைச் செயலத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆலோசித்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை நடிகர் விஷால் சந்தித்து முறையிட்டு புகார் மனு அளித்துள்ளார்.

அவர் செவ்வாய் அன்றே இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com