ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த வேட்புமனு பரிசீலனையில் 72 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், புதன்கிழமை யாரும் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அறிவிப்பை அடுத்து, தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கடந்த நவ.27-ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான திங்கள்கிழமை வரை மாற்று வேட்பாளர்கள் உள்பட 145 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது. அன்றைய தினம் முக்கிய வேட்பாளர்களான அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் என்.மருதுகணேஷ், சுயேச்சையாகப் போட்டியிடும் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம், இதர சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 72 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. நடிகர் விஷால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோரின் மனுக்கள் உள்பட 73 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
விஷால் மனு பரிசீலனையில் குழப்பம்: நடிகர் விஷாலின் வேட்பு மனு பரிசீலனையின்போது, முன்மொழிவோரில் இருவர் தாங்கள் கையெழுத்திடவில்லை என வாக்குமூலம் அளித்ததை அடுத்து வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்கான காரணங்களை மறுத்து நடிகர் விஷால், தனது ஆதரவாளர்களுடன் தண்டையார்பேட்டை மண்டல அலுவலக வாயிலில் மறியலில் ஈடுபடத் தொடங்கினார். இதையடுத்து போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர். 
அதையடுத்து நடிகர் விஷால் மீண்டும் தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமியைச் சந்தித்து தனது தரப்பு வாதங்களை எடுத்துரைத்தார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து அலுவலகத்தை விட்டு வெளிவந்த விஷால் ஊடங்களைச் சந்தித்து தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறினார். 
ஆனால் சுமார் 2 மணி நேரம் தேர்தல் அதிகாரிகள் நடத்திய ஆலோசனையை அடுத்து நள்ளிரவு நெருங்கும் நேரத்தில், விஷால் அளித்துள்ள ஆதாரங்கள், ஏற்கத் தக்க வகையில் இல்லை என்பதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி அறிவித்தார்.
தீபா ஆதரவாளர்கள் முற்றுகை: இதற்கிடையே ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிப்பால், அவரது ஆதரவாளர்களும் மண்டல அலுவலகத்தை இரவில் முற்றுகையிட்டனர். இதனால் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை பரபரப்பாகக் காணப்பட்டது.
புதன்கிழமை தொடர்ந்த பரபரப்பு: வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் புதன்கிழமை காலை தொடங்கி வியாழக்கிழமை மாலை 3 மணி வரை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக வேட்பாளர் மருதுகணேஷின் வழக்குரைஞர்கள் ஜெபதாஸ் பாண்டியன், சந்திரபோஸ், சுயேச்சை வேட்பாளர்கள் கலையரசன், ஷாஜகான் உள்ளிட்ட சிலர் மண்டல அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனர். அவர்களை அலுவலகத்துக்குள் செல்வதற்கு போலீஸார் தடை விதித்தனர். 
இதையடுத்து அவர்கள் அனைவரும் அலுவலக வாயிலில் தர்ணாவில் ஈடுபடத் தொடங்கினர். அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் அலுவலகத்துக்குள் தாராளமாக அனுமதிக்கப்படுவதாகவும், பிற வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கு மட்டும் அனுமதி மறுத்து பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டி கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பிரமணி அலுவலக வாயிலுக்கு வந்து வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டும் உள்ளே வர அனுமதித்தார். அதைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
பெண்கள் முற்றுகை: ஆர்.கே. நகர் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட பர்மா நகர், ஜீவா நகர், ஐ.ஓ.சி. தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சரியான கணக்கெடுப்பு நடத்தாமல் திடீரென தங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி பெண்கள் சிலர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் அவர்களை போலீஸார் அலுவலகத்துக்குள் அனுமதிக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க வேண்டுமெனில் டிச.5 முதல் 7-ஆம் தேதிக்குள் வரலாம் என அறிவுறுத்தியதை அடுத்தே அலுவலகத்துக்கு வந்ததாகக் கூறி தங்கள் அடையாள அட்டை காண்பித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். போலீஸார் அவர்களை சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர்.
முதியோர் போராட்டம்: தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்துக்கு 20-க்கும் மேற்பட்ட முதியோர் வந்து தேர்தல் நடத்தும் அதிகாரியைச் சந்திக்க வேண்டும் என்றனர். போலீஸார் மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில்அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்கள், ஆர்.கே.நகர் தேர்தலை காரணம் காட்டி முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டும் 26 ஆயிரம் முதியவர்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர். இந்த திடீர் நடவடிக்கையால் முதியோர் அனைவரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். உடனடியாக முதியோர் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். போலீஸார் அவர்கள் அளித்த மனுவை பெற்று உயர் அதிகாரியிடம் தருவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருப்பி அனுப்பினர்.
தொப்பி யாருக்கு-இன்று தெரியும்: வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை வாபஸ் பெற காலஅவகாசம் உள்ளது. அதையடுத்தே இறுதியாக களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் நிலவரம் தெரியவரும். பின்னர் அவர்கள் கோரியுள்ள சின்னங்கள் தொடர்பான முடிவு தேர்தல் ஆணையத்தின் தற்போதைய விதிமுறைகளைப் பின்பற்றி ஒதுக்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் களத்தில் இதுவரை போட்டியில் உள்ள 72 வேட்பாளர்களில் டிடிவி தினகரன் உள்பட 29 பேர் தொப்பி சின்னம் கேட்டு மனு செய்துள்ளனர். எனவே, அவர்களுக்கு மட்டும் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் வியாழக்கிழமை இரவு வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com