அடுத்த ஆண்டு முதல் "ஆன்லைன்' முறையில் பள்ளிகளுக்கு அங்கீகாரம்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளுக்கு, "ஆன்லைன்' முறையில் அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் "ஆன்லைன்' முறையில் பள்ளிகளுக்கு அங்கீகாரம்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளுக்கு, "ஆன்லைன்' முறையில் அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சரி, மெட்ரிக் மற்றும் சுயநிதிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், நர்சரிப் பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகமும், மெட்ரிக் பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குநரகமும் சுயநிதிப் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் (இடைநிலை, மேல்நிலை) ஆகியோரால் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அங்கீகாரத்துக்கு, தீயணைப்புத் துறை, வருவாய்த்துறை உள்பட தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து, தடையின்மைச் சான்றிதழ்கள் பெற வேண்டும். கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு பின் அமலுக்கு வந்த சிட்டிபாபு கமிட்டியின் பரிந்துரைகளையும் பின்பற்ற வேண்டும். 
தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னர், அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்த பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறையினரால் கள ஆய்வு மேற்கொண்டு உரிய ஆவணங்களைப் பார்வையிட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அவை சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு மாதத்துக்குள் அங்கீகாரம் வழங்கப்படும். அதில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்து மீண்டும் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கும் வரையில் நிலுவையில் இருக்கும். 
இந்நிலையில் அங்கீகார விதிகள் மற்றும் நடைமுறை குழப்பங்களைத் தீர்க்க, வரும் கல்வியாண்டு (2018-2019) முதல், "ஆன்லைன்' அங்கீகார முறை அமலுக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ.யைப் போல், ஆன்லைனில் ஆவணங்களை பரிசீலித்து, அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.
நேர விரயம் தவிர்க்கப்படும்: ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் வேண்டுமானால் அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குறிப்பிட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அது தொடர்பான அனைத்து கருத்து பரிமாற்றங்களும் இணையதளம் மூலமாகவே இருக்கும். இந்த முறையில், தொழில்நுட்ப ரீதியாக, இணையதளத்தில் கேட்கப்படும் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த பிறகே, பள்ளிகள் பதிவு செய்ய முடியும். மேலும் சான்றிதழ் சமர்ப்பிக்கவும், மறுவிசாரணைக்கு ஆகும் நேர விரயம் ஆகியனவும்
தவிர்க்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com