உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்

ஒக்கி புயல் பாதிப்பால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு காப்பீடு உதவித் தொகை ரூ.2 லட்சம் உள்பட தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
காணாமல் போன மீனவர்களைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
காணாமல் போன மீனவர்களைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

ஒக்கி புயல் பாதிப்பால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு காப்பீடு உதவித் தொகை ரூ.2 லட்சம் உள்பட தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
ஒக்கி புயல் பாதிப்புத் தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணைய சத்யகோபால், மீன் வளத்துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
ரூ.10 லட்சம் நிதி: புயலில் சிக்கி மரணமடைந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு உதவி ரூ.2 லட்சம் உள்பட தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
புயல் பாதிப்பால் ஊனமடைந்து, தொடர்ந்து மீன்பிடி தொழில் மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் வழங்கிட ஏதுவாக மறுவாழ்வு நிதியுதவியாக ரூ.5 லட்சமும் மருத்துவ நிவாரணமாக தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வாழ்வாதார உதவி: புயல் பாதிப்பால் டிசம்பர் மாதம் மீன்பிடி தொழிலைச் செய்ய முடியாத நிலையைக் கருத்தில் கொண்டு வாழ்வாதாரம் இழந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து மீனவர் குடும்பங்களுக்கும் வாழ்வாதார உதவியாக ரூ.2,500 வழங்கப்படும். மேலும், காணாமல் போன மீனவர் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் தொகை ரூ.5 ஆயிரம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
லட்சத்தீவுகளில் தஞ்சமடைந்துள்ள மீனவர்களுக்கு உணவுப்படி ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரமும், டீசலுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். கர்நாடகம், கேரளத்தில் தஞ்சமடைந்துள்ள மீனவர்களுக்கு உணவுப்படி ரூ.2 ஆயிரமும், டீசலுக்கு ரூ.750-ம் வழங்கப்படும்.
ஜி.பி.எஸ்.கருவி: மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் புதுப்பிக்க தகுந்த மதிப்பீடு செய்த பிறகு உரிய நிவாரணம் வழங்கப்படும். வரும் காலங்களில் அனைத்துப் படகுகளையும் தவறாமல் பதிவு செய்வதுடன் ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் ஜி.பி.எஸ். மற்றும் தகுந்த தகவல் தொடர்புக் கருவி பொருத்தப்படும்.
மரணடைந்த மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி உதவியுடன் கல்வி நிறுவனங்கள் மூலம் திறன் வளர் பயிற்சிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கணக்கெடுப்புப் பணி: புயலினால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 11 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களுக்கு தமிழக அரசு செலவில் எரி எண்ணெய், உணவுப் பொருள்கள் வழங்கி, படகுகளுடன் சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கு 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், கேரளம், லட்சத்தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீனவர்களை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
காணாமல் போன மீனவர்கள், கரை சேர்ந்த மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட படகுகள் குறித்து கணக்கெடுப்புப் பணி கிராம வாரியாக நடந்து வருகிறது. இதன் அடிப்படையில் காணாமல் போன மீனவர்கள் குறித்த விரிவான ஆய்வு மேற்கொண்டு இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் அலுவலர் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் காணாமல் போன மீனவர்களை இறந்தவர்களாகக் கருதி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com