ஒக்கி புயல்: காணாமல்போன 1,969 மீனவர்கள் குறித்த விவரம் கிடைத்துள்ளது

"ஒக்கி' புயலில் காணாமல்போன 1,969 மீனவர்களின் பெயர்ப் பட்டியல் கிடைத்துள்ளது என, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

"ஒக்கி' புயலில் காணாமல்போன 1,969 மீனவர்களின் பெயர்ப் பட்டியல் கிடைத்துள்ளது என, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
ஒக்கி புயலுக்குப் பிறகு 282 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி, பிற மாவட்டங்களைச் சேர்ந்த 2, 641 மீனவர்கள் காணாமல் போனதாக கூறப்பட்டு வந்தது. அவர்களில் 2,230 பேர் மகாராஷ்டிரம், லட்சத்தீவு, கர்நாடகம், குஜராத், கேரள மாநிலங்களில் 15 இடங்களில் கரைசேர்ந்துள்ளனர். இதில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 1,969 பேரும், அவர்களின் 249 படகுகளும் அடங்கும்.
அனைத்து மாநிலங்களிலும் மீட்கப்பட்ட 1,969 மீனவர்களின் பெயர்ப் பட்டியல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு அனுப்பியுள்ளது. 
ஒக்கி புயலால், குமரி மாவட்டம் ராமன்துறையைச் சேர்ந்த ஜெர்மியாஸ் (50), இனயம்புத்தன்துறையைச் சேர்ந்த சூசை (58) ஆகிய 2 மீனவர்கள் இறந்துள்ளனர். 
வருவாய், காவல், மீன்வளத் துறைகளுடன் இணைந்து குழு அமைத்து கிராமந்தோறும் சென்று பட்டியல் தயாரித்துள்ளோம். ஒருங்கிணைக்கப்பட்ட அப்பட்டியல் அடிப்படையில் நீரோடி, வள்ளவிளை, சின்னத்துறை, பூத்துறை, மார்த்தாண்டன்துறை உள்ளிட்ட 8 கிராமங்களில் 75 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 855 பேரைக் காணவில்லை எனத் தெரிய வந்தது. அதில் 130 பேரும், 11 படகுகளும் பிற மாநிலங்களில் பத்திரமாக உள்ளனர்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெருவாரியான படகுகள், கேரளத்தை அடிப்படையாகக் கொண்டு தொழில் செய்து வருவதால் அவற்றைக் கணக்கெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com