கடலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி குழித்துறையில் 8 மீனவ கிராமத்தினர் ரயில் மறியல்

கடலில் மீன்பிடிக்கச் சென்று, ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் 8 மீனவ கிராம மக்கள் வியாழக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனர். 
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்.

கடலில் மீன்பிடிக்கச் சென்று, ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் 8 மீனவ கிராம மக்கள் வியாழக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனர். 
இந்தப் புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டநிலையில், நீரோடி முதல் இரயுமன்துறை வரையிலான 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 60 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 1,013 மீனவர்களைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவர்களை மீட்கக் கோரி ரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, இரயுமன்துறை ஆகிய மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், பெண்கள் சின்னத்துறையிலிருந்து நித்திரவிளை, புதுக்கடை, காப்புக்காடு வழியாகவும், நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கொல்லங்கோடு, களியக்காவிளை வழியாகவும் சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு வியாழக்கிழமை நடைபயணமாக குழித்துறைக்கு வந்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்தூர் மறைவட்ட குருகுல முதல்வர் ஆன்ட்ரூஸ், செயலர் பிரிட்டோ மற்றும் பங்குத்தந்தையர் மல்பின்சூசை (இரயுமன்துறை), ஆன்றோ ஜோரிஸ் (பூத்துறை), பெபின்சன் (தூத்தூர்), ஷாபின் (சின்னத்துறை), அரிஸ்டோ (ரவிபுத்தன்துறை), டார்வின் (வள்ளவிளை), போஸ்கோ (மார்த்தாண்டன்துறை), லூசியான்ஸ் (நீரோடி), ஐ.நா. சபையின் சர்வதேச இளைஞர் கவுன்சில் உறுப்பினர் பி. ஜஸ்டின் ஆன்டனி, பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப. உதயகுமார், தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலர் சர்ச்சில், எம்.எல்.ஏ.க்கள் கிள்ளியூர் எஸ். ராஜேஷ்குமார், குளச்சல் ஜே.ஜி. பிரின்ஸ், பத்மநாபபுரம் மனோ தங்கராஜ் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள் பகல் 12 மணியளவில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், திருவனந்தபுரம் - திருச்சி இன்டர் சிட்டி ரயில், திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயில், பெங்களூரு - கன்னியாகுமரி ரயில், கொல்லம் - சென்னை அனந்தபுரி விரைவு ரயில் உள்ளிட்ட பல ரயில்கள் இத்தடத்தில் இயக்கப்படவில்லை. 
மாலையில் கன்னியாகுமரியிலிருந்து கேரள மாநிலம், புனலூர் செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டதாக ரயில் நிலையத்தில் அறிவிக்கப்பட்டது. இப்போராட்டத்தால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சராட்கர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அருண் சக்திகுமார் (திருநெல்வேலி) மணிவண்ணன் (மதுரை), குளச்சல் ஏஎஸ்பி சாய் சரண் தேஜஸ்வி, ரயில்வே டிஎஸ்பிக்கள் மன்னர் மன்னன் (மதுரை), அன்பழகன் (திருநெல்வேலி), கோபகுமார் (திருவனந்தபுரம்) , 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ராஜகோபால் சுங்ரா உள்ளிட்ட அதிகாரிகளும் வந்திருந்தனர். 
போராட்டக்காரர்களுடன் டிஐஜி கபில்குமார் சராட்கர் பேச்சு நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனிடையே, பிற்பகலில் லேசான மழை பெய்தபோதும், மழையிலும் நனைந்தபடியே போராட்டம் தொடர்ந்தது.
மாயமான மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு இருந்தனர். 
தொடர்ந்து இரவு 7 மணியளவில் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை ஆகியோர் வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினார். 
அதிலும், முடிவு எட்டப்படவில்லை. இரவு 9 மணிக்கு மேலும் போராட்டம் தொடர்ந்தது.

பெண் மயக்கம்

ரயில் மறியலின்போது, போராட்டத்தில் ஈடுபட்ட சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த மரியா (60) என்பவர் மயங்கி விழுந்தார். அவரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீட்டு அரசு ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com