களத்தில் 59 வேட்பாளர்கள்; தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம்

களத்தில் 59 வேட்பாளர்கள்; தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 59 பேர் போட்டியிட உள்ளனர். 72 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 13 சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் மனுவை வியாழக்கிழமை வாபஸ் பெற்றனர்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 59 பேர் போட்டியிட உள்ளனர். 72 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 13 சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் மனுவை வியாழக்கிழமை வாபஸ் பெற்றனர். இதையடுத்து தேர்தல் களத்தில் ஒரு பெண் உள்பட 59 வேட்பாளர்கள் உள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி வியாழக்கிழமை பிற்பகலில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கியது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிப்பை அடுத்து கடந்த நவ.27-ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான திங்கள்கிழமை வரை மொத்தம் 145 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்போது 73 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 72 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
வேட்பு மனுவை புதன், வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள் வாபஸ் பெற கால அவகாசம் இருந்தபோதும், புதன்கிழமை எவரும் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு வாபஸ் பெற காலஅவகாசம் இருந்தது. இந்நிலையில், காலஅவகாசம் நிறைவடைவதற்கு சுமார் 10 நிமிடங்களுக்கு முன்பு 13 சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற வந்துள்ளதாக தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். 
போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியைச் சந்தித்து தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தனர். அவர்கள் 13 பேரும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதை அடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரானது.
களத்தில் 59 வேட்பாளர்கள்: முக்கிய வேட்பாளர்களான அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் என்.மருதுகணேஷ், சுயேச்சையாகப் போட்டியிடும் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 பேரின் பெயர்கள் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 
அவர்களில் சுயேச்சை வேட்பாளராக பெண் ஒருவரின் பெயரும் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து 59 வேட்பாளர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரி கே. வேலுச்சாமி வெளியிட்டார்.
சின்னம் ஒதுக்கும் பணி தொடக்கம்: அதைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. முதலில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், அடுத்து பதிவு செய்யப்பட்ட கட்சிகள், இறுதியாக சுயேச்சை வேட்பாளர்கள் என சின்னம் ஒதுக்கீடு செய்வதில் நடைமுறை விதிகள் உள்ளன. அதன்படி முதலில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அவர்களுக்கான சின்னங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
தினகரன் எதிர்ப்பு: அப்போது, அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் வேட்புமனுவில், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்வதற்கான படிவத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதற்கு டிடிவி தினகரன் எதிர்ப்புத் தெரிவித்தார். சின்னத்தை ஒதுக்கீடு செய்ய கட்சியின் பொதுச் செயலர் மட்டுமே கையெழுத்திட அதிகாரம் இருக்கிறது. அதனால் அந்தப் படிவத்தை ஏற்கக் கூடாது என்றார்.
எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினரை அங்கீகரித்து, அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே வழங்கியுள்ளதால், டிடிவி தினகரனின் கோரிக்கையை ஏற்க தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து, அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் உடனடியாக வழங்கப்பட்டது.
தினகரனுக்கு பிரஷர் குக்கர்: ஆர்.கே.நகரில் கடந்த இடைத் தேர்தலின்போது தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது. இப்போது மீண்டும் அதே சின்னத்தை திரும்பப் பெறுவதற்காக தொப்பிக்கு முன்னுரிமை கொடுத்து, தொப்பி, விசில், கிரிக்கெட் மட்டை ஆகியவற்றை தனது வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார். 
இந்நிலையில், தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களில் 29 பேர் தொப்பி சின்னம் கோரியிருந்தனர். இதில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களான நமது கொங்கு முன்னேற்றக் கழகம் எம். ரமேஷ், தேசிய மக்கள் சக்தி கட்சி எம்.எல். ரவி ஆகியோர் தொப்பி சின்னம் கோரியிருந்தனர். இதனால் குலுக்கல் முறையில் எம்.ரமேஷுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இதர சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. அதில் தினகரன் கோரியிருந்த விசில், கிரிக்கெட் மட்டை ஆகியவையும் குலுக்கல் முறையில் வேறு சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com