குஜராத் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

குஜராத் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை ஓய்ந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவி வருவதால், பிரசாரத்தில் அக்கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுக

குஜராத் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை ஓய்ந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவி வருவதால், பிரசாரத்தில் அக்கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் தீவிரமாக முன்வைத்ததைக் காண முடிந்தது.
மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 
இதன் காரணமாக அந்தத் தொகுதிகள் அனைத்தும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பரபரப்பான சூழலில் உள்ளன.
இந்தத் தேர்தலானது எதிர் வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுவதே அதற்கு முக்கியக் காரணம். 
இந்த நிலையில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என தேசியத் தலைவர்கள் அனைவரும் குஜராத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டனர். அவர்களது பிரசாரத்தில், சர்ச்சைகள் , விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், நெகிழ்ச்சிகள் என பல்வேறு அம்சங்களும் அடங்கியிருந்து கூடுதல் சிறப்பு.
குறிப்பாக, பிரதமர் மோடியை இளைஞர் காங்கிரஸார் தேநீர் விற்றவர் எனக் குறிப்பிட்டதற்கு பாஜக தரப்பில் பதிலடி தரப்பட்டது. அதுகுறித்து பிரசாரத்தின்போது பேசிய மோடி, "நான் தேநீர் விற்றேனே தவிர தேசத்தை விற்கவில்லை' என்று உணர்வுப்பூர்வமாக பதிலளித்தார். இதனிடையே, ராகுல் காந்தியும் பல்வேறு புதிய பிரசார உத்திகளை இந்தத் தேர்தலில் கடைப்பிடித்து வருகிறார். 
முதலில், கோயில்களுக்குச் சென்று வழிபட்டதுடன், அங்கிருந்த மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர், பிரதமருக்கு தினமும் ஒரு கேள்வி என்ற பிரசாரத்தையும் அவர் தொடங்கினார். குஜராத் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாக நாள்தோறும் அவர் கேள்விகளை எழுப்பி வருகிறார்.
தேசியத் தலைவர்களின் பிரசாரம் இவ்வாறு இருக்க கீழ்நிலைத் தலைவர்களின் பிரசாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. அதில் பாஜக வேட்பாளர் சைலேஷ் சோட்டா இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தெரிவித்த கருத்து முதன்மையானது. இஸ்லாமிய மக்கள்தொகையைக் குறைக்க வேண்டும் என அவர் பேசியது சர்ச்சைகளை உருவாக்கியது.
மறுபுறம், பிரதமர் மோடியை இழிவுபடுத்தி மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்துகளும் குஜராத் முதல்கட்ட பிரசாரத்தின் இறுதிநாளில் எதிரொலித்தது. இவ்வாறாக, முதல்கட்ட பிரசாரங்கள் பல்சுவை கலவையாக அமைந்திருந்தன.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்: இதனிடையே, குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவடையும் வரை, பிரபலமான பொருள்களின் சரக்கு-சேவை வரி குறைப்பு பற்றிய விவரங்களை வெளியிடக் கூடாது என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது:
முதல் கட்டமாக, வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு விளம்பரத்தையும் அரசு வெளியிடக் கூடாது. அதன்படி, ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய விவரங்கள், வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. எனினும், எந்தவொரு பொருளின் பெயரையும் குறிப்பிடாமல், வரி குறைப்பு பற்றிய பொதுவான விளம்பரத்தை அரசு வெளியிடலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com