தந்தையையும் கொலை செய்யத் திட்டமிட்டேன்: தஷ்வந்த் வாக்குமூலம்

தந்தையையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக தாயைக் கொன்ற சென்னையைச் சேர்ந்த இளைஞர் தஷ்வந்த் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தந்தையையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக தாயைக் கொன்ற சென்னையைச் சேர்ந்த இளைஞர் தஷ்வந்த் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குன்றத்தூர், சம்பந்தன்நகர், ஸ்ரீராம் சாலைப் பகுதியைச் சேர்ந்த சேகர் - சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த் (22). சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், சிறையிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 2-ஆம் தேதி தனது தாயார் சரளாவை அடித்துக் கொலை செய்துவிட்டு, அவர் கழுத்திலிருந்த 25 பவுன் தங்க நகையுடன் தப்பினார். இதையடுத்து, தனிப்படை போலீஸார் அவரை மும்பை ரேஸ்கோர்ஸ் பகுதியில் புதன்கிழமை கைது செய்தனர். பின்னர், சென்னைக்கு கொண்டுவர வியாழக்கிழமை மும்பை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது திடீரென போலீஸாரிடம் இருந்து கைவிலங்குடன் தப்பியோடினார். இந்நிலையில் மீண்டும் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் வெள்ளிக்கிழமை தஷ்வந்த் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மும்பை பாந்த்ராவிலுள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 3 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதித்தது. போலீஸ் காவலுக்குப் பிறகு தஷ்வந்த்தை செவ்வாய்க்கிழமை (டிச.12) காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது.
விடிய விடிய விசாரணை: இதையடுத்து, தஷ்வந்த்தை போலீஸார் சனிக்கிழமை இரவு 10.45 மணியளவில் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். உடனடியாக குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட தஷ்வந்த்திடம் போலீஸார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
வாக்குமூலம்: தாயார் சரளாவை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு நகைகளைப் பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்ட தஷ்வந்த், செலவுக்குப் பணம் தராததாலும், அடிக்கடி திட்டி வந்ததாலும் பெற்றோர் இருவரையுமே கொலை செய்ய முடிவு செய்திருந்ததாகவும், சம்பவத்தன்று தந்தை சேகர் வேலைக்குச் சென்றுவிட்டதால் தாயார் சரளாவை மட்டும் கொலை செய்துவிட்டு நகைகளுடன் தப்பிச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சிறுமி கொலை வழக்கில் சிறையில் இருந்தபோது, நண்பர்களான சிட்லபாக்கம் டேவிட், ஜேம்ஸ் ஆகியோருடன் சென்று நகைகளை விற்றுத்தர செங்குன்றம் மணிகண்டன் அணுகியதாவும், ஆனால் அவர் நகைகளுடன் தலைமறைவாகி விட்டதால் டேவிட் அளித்த ரூ.40 ஆயிரம் பணத்துடன் மும்பை சென்றதாகவும் அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மும்பையில் தொழிலாளி வீட்டில் தங்கியிருந்து குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த தஷ்வந்த்தை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். தஷ்வந்த் மும்பைக்குச் செல்வதற்கு முன் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை விட்டுச் சென்றுள்ளார். அதை தற்போது போலீஸார் தேடி வருகின்றனர். அத்துடன், தஷ்வந்த்தின் நண்பர்கள் டேவிட், ஜேம்ஸ் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு: சென்னை, மவுலிவாக்கத்தில் உள்ள மதனந்தபுரத்தில் 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சிறுமி கொலை வழக்கு இம்மாத இறுதிக்குள் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் நீதிமன்ற விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வரக்கூடும் என போலீஸார் தெரிவித்தனர்.
சிறையிலடைப்பு
குன்றத்தூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விசாரணையின்போது தஷ்வந்த்தின் தந்தை சேகர் அங்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் கையெழுத்துப் பெறப்பட்டு தஷ்வந்த் செங்கல்பட்டில் உள்ள மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவரை வரும் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மீண்டும் காவலில் எடுக்கத் திட்டம்: தஷ்வந்த்தை மீண்டும் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அவரை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, தஷ்வந்த்தின் நகைகளைப் பறித்துச் சென்ற மணிகண்டன், ராமநாதபுரத்தில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com