மாயமானவர்களை மீட்க வலியுறுத்தி 4 ஆயிரம் மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம்

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி, மாவட்டத்தின் 9 கிராமங்களில் சுமார் 4 ஆயிரம் பேர் கடலில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர்.
முட்டத்தில் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்திய மீனவர்கள். 
முட்டத்தில் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்திய மீனவர்கள். 

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி, மாவட்டத்தின் 9 கிராமங்களில் சுமார் 4 ஆயிரம் பேர் கடலில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர்.
ஒக்கி புயல் எச்சரிக்கை கிடைப்பதற்கு முன்பே குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடலுக்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களில் புயலில் சிக்கி மாயமானவர்கள் தற்போது லட்சத்தீவு, மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத், கோவா, கேரளம் பகுதிகளில் கரை ஒதுங்கி தமிழகத்துக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் பல மீனவர்களிடமிருந்து தகவல் ஏதும் கிடைக்காததால், அவர்களது கதி என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர். இதனால் அவர்களை மீட்க வலியுறுத்தி, மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 7-ஆம் தேதி குழித்துறையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக குளச்சல், தேங்காய்ப்பட்டினம், மணவாளக்குறிச்சி, கடியப்பட்டினம் ஆகிய மீனவ கிராமங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திலும் ஏராளமான மீனவர்கள் பங்கேற்றனர். 3-ஆவது நாளாக சனிக்கிழமை கன்னியாகுமரி, கல்லுகட்டி, சின்னத்துறை மீனவக் கிராமங்களில் மறியல் நடைபெற்றது.
இந்நிலையில் 4 -ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை, குமரி மாவட்டம் பள்ளம் கடற்கரையிலிருந்து கடியப்பட்டினம் வரையிலான 9 மீனவ கிராமங்களில் கருப்புக் கொடி ஏந்தி, கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாயமான மீனவர்களை விரைந்து மீட்கவேண்டும், மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
முட்டம், ராஜாக்கமங்கலம் துறை, கடியப்பட்டினம், பொழிக்கரை, அன்னை நகர், பள்ளம், கேசவன்புத்தன்துறை, பெரியகாடு, அழிக்கால் பிள்ளைத்தோப்பு ஆகிய மீனவ கிராமங்களில் இப்போராட்டம் நடைபெற்றது. 
இதில் கடியப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் கருப்புக் கொடியுடன் 
நின்றவாறு மீனவர்கள் மனிதச் சங்கிலி நடத்தினர். 
பிற பகுதிகளில் மீனவர்கள் குடும்பத்தினருடன் கடலுக்குள் இறங்கி முழக்கமிட்டனர்.
காலையில் தொடங்கிய இப்போராட்டம் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. மீனவர்களின் தொடர் போராட்டத்தால் குமரி கடற்கரைக் கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் மீனவ கிராமங்களில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com