ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்த மாணவி: அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநர் நேரில் விசாரணை

ஆம்புலன்ஸ் தாமதத்தால் மாணவி உயிரிழந்தது தொடர்பாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநர் இன்பசேகரன் திங்கள்கிழமை நேரில் விசாரணை நடத்தினார்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் விசாரணை நடத்திய மாநில மருத்துவ இயக்குநர் இன்பசேகரன்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் விசாரணை நடத்திய மாநில மருத்துவ இயக்குநர் இன்பசேகரன்.

ஆம்புலன்ஸ் தாமதத்தால் மாணவி உயிரிழந்தது தொடர்பாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநர் இன்பசேகரன் திங்கள்கிழமை நேரில் விசாரணை நடத்தினார்.
காஞ்சிபுரத்தை அடுத்த சின்னகாஞ்சிபுரம் நசரத்பேட்டை பகுதியில் வசிப்பவர் நெசவாளர் ஆனந்தன். இவரது மகள் சரிகா(15) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவி சரிகாவின் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வந்தார். 
இதில், அந்த மாணவியின் உடல்நிலை ஞாயிற்றுக்கிழமை மோசமானது. இதையடுத்து, மருத்துவர் அவரைப் பரிசோதனை செய்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார். 
இதையடுத்து, தொடர்ந்து 6 மணி நேரத்துக்கும் மேலாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வராததால், மாணவியின் உடல்நிலை மேலும் பாதிப்படைந்ததால், பெற்றோர் செய்வதறியாது தவித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட சரிகா போரூர் அருகே நடுவழியில் உயிரிழந்தார். 
இதனை அறிந்த தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததற்கான காரணம், மருத்துவமனையில் இருந்து உரிய தகவல் அனுப்பப்பட்டதா, மருத்துவர்கள் அளித்த சிகிச்சை விவரம் குறித்து விசாரணை நடத்த 
உத்தரவிட்டார். இதையடுத்து மருத்துவத் துறை இயக்குநர் இன்பசேகரன் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் வந்தார். 
மாணவி சரிகாவுக்கு சிகிச்சை அளித்தபோது பணியில் இருந்த அனைவரையும் வரவழைத்து விசாரணை நடத்தினார். 
ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததற்கான காரணம் குறித்தும் மருத்துவ ஊழியர்கள், ஆம்புலன்ஸ் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
மாணவி சரிகா கடந்த 4-ஆம் தேதி காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிறுநீரக செயலிழப்புக்காக டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 6-ஆம் தேதி சரிகாவை பரிசோதனை செய்ததில் அவருக்கு நுரையீரலில் நீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டது. 
அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நுரையீரலில் தேங்கிய நீரை மருத்துவர்கள் அகற்றினர். தொடர்ந்து, அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். 
இந்நிலையில், 8-ஆம் தேதி சரிகா உடலில் ரத்தத்தில் உள்ள உப்பின் அளவு குறையத் தொடங்கியது. 
அப்போது அவருக்கு டயாலிஸில் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இதையடுத்து, அவரின் உடல்நிலை மோசமானதால், அவரைப் பணி மருத்துவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்துள்ளார். 
அப்போது, மாணவி சரிகாவின் உறவினர்கள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குச் செல்வதாக தெரிவிக்கின்றனர். இதில், உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்காக ஏற்கெனவே சரிகா, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காத்திருப்புப் பட்டியலில் இருந்து வந்தார். எனவே, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. 
சரிகாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்தவொருப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவரை மேல்சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்வதற்கே காலதாமதாகியுள்ளது என்பது தெரியவருகிறது. 
இதுதொடர்பாக, ஆம்புலன்ஸ் நிர்வாகம், மருத்துவமனை ஊழியர்களான பணி மருத்துவர் அவசர சிகிச்சை மருத்துவர், செவிலியர்கள், ஊழியர்களிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவைப்பட்டால் சரிகாவின் உறவினர்களை அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார் இன்பசேகரன்.
இதுதொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், சரிகாவை மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைப்பதற்கு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மற்றும் மாலை 4.30 மணிக்கு ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அடுத்தடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அனைத்துப் பதிவுகளும் எங்களிடம் உள்ளன என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com