ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழகத்தில் விடிவை ஏற்படுத்தும்: மு.க.ஸ்டாலின்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு, தமிழகத்தில் விடிவு காலத்தை ஏற்படுத்தும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார்.
 திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து சென்னை தண்டையார்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்திய வைகோ.
 திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து சென்னை தண்டையார்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்திய வைகோ.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு, தமிழகத்தில் விடிவு காலத்தை ஏற்படுத்தும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், தண்டையார்பேட்டையில் திங்கள்கிழமை மாலை பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மு.க.ஸ்டாலின் பேசியது:
தமிழக உரிமைகள் அனைத்தும் மத்திய அரசால் பறிக்கக்கூடிய சூழல் மாநிலத்தில் உள்ளது. கடந்த காலங்களில் எங்கள் அணியில் உள்ள தலைவர்களுக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்தின் உரிமைகளை மீட்பதற்கு ஒன்றிணைந்துள்ளோம்.
நாங்கள் (ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி) இருவரும் இரட்டை குழல் துப்பாக்கி என்று ஓ.பன்னீர்செல்வம் தற்போது கூறுகிறார். ஆனால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய மூவரும் சேர்ந்து மூன்று குழல் துப்பாக்கிகள். ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை மூவரும் நன்கு அறிந்தவர்கள் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டுகிறேன். 
கடந்த முறை ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்ததன் காரணமாகத்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போதும் பணப் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பாஜகவின் மேடையில்தான் அதிமுக ஆட்சி செய்து வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்பது வெறும் தேர்தல் அல்ல. இது தமிழகத்துக்கு விடிவு காலத்தை அளிக்கக்கூடிய தேர்தல்.
மாயமான மீனவர்கள் விவகாரம்: கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட மீனவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. மீனவர்கள் எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்கிற தகவல்கூட கணக்கெடுக்க முடியாத அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது. மீனவர் விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க உள்ளோம். அதனைத் தொடர்ந்து தில்லி சென்று மத்திய அமைச்சர்களையும் சந்தித்து முறையிட உள்ளோம். அதன் பிறகும் இந்த விஷயத்தில் மௌனம் காக்கப்பட்டால் கூட்டணியில் உள்ள தலைவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றார் ஸ்டாலின். 
முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் பேசியது:
பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அந்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட இதுவரை நிறைவேற்றவில்லை. வகுப்புவாதத்தை முன்னெடுப்பதில் பாஜகவினர் முதன்மையான கவனத்தை செலுத்தி வருகின்றனர். மத்திய பாஜக ஆட்சியை அகற்றும் வல்லமை ராகுல் காந்திக்கும், தமிழகத்தில் உள்ள பாஜக-வின் ஆதரவுடன் செயல்படும் அதிமுக ஆட்சியை அகற்றும் வல்லமை ஸ்டாலினுக்கும் உள்ளது. இவை விரைவில் நிறைவேறும் என்றார் அவர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலரும் பேசினர்.
ஸ்டாலின் விரைவில் முதல்வர்: வைகோ
மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் முதல்வராகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திங்கள்கிழமை நடந்த திமுக பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:
மத்திய அரசிடம் சரணாகதி அடைந்த அரசாக தற்போதைய தமிழக அரசு உள்ளது. 
நீட் தேர்வு, ஜிஎஸ்டி, உணவுப் பாதுகாப்புச் சட்டம் உள்பட மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் தமிழக அரசு மத்திய அரசிடம் தாரை வார்த்துவிட்டது. 'மரபுகளை மீறி ஆளுநர் மாவட்டவாரியாக ஆய்வு செய்கிறார். அப்படி அவர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம்' என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதை நான் பாராட்டுகிறேன். மதச்சார்பின்மைதான் இந்தியாவின் ஜனநாயகக் காவல். அதைத் தகர்க்க மத்திய அரசு நினைக்கிறது. அதை நாங்கள் எதிர்ப்போம். தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com