சுடுகாட்டுக்கு யாருமே இப்படி வந்திருக்க மாட்டார்கள்: 90 வயது பெண்ணின் கண்ணீர் கதை

மனிதனின் வாழ்க்கை முடிவது சுடுகாட்டில் என்பதை விளக்கும் பல பழமொழிகளும், வழக்குகளும் உள்ளன. ஆனால் இங்கு, 90 வயது மூதாட்டியின் வாழ்க்கையில் நடந்த சோகம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
சுடுகாட்டுக்கு யாருமே இப்படி வந்திருக்க மாட்டார்கள்: 90 வயது பெண்ணின் கண்ணீர் கதை


கோவை: மனிதனின் வாழ்க்கை முடிவது சுடுகாட்டில் என்பதை விளக்கும் பல பழமொழிகளும், வழக்குகளும் உள்ளன. ஆனால் இங்கு, 90 வயது மூதாட்டியின் வாழ்க்கையில் நடந்த சோகம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

கலிங்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டியை சுடுகாட்டுக்குக் கூட்டி வந்து உட்கார வைத்த  அவரது மகள், டீ வாங்கிக் கொண்டு வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். 

டீ வாங்கச் சென்ற தன் மகள் திரும்ப வருவாள் என்று ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அல்ல, ஒரு நாள், இரண்டு நாள் அல்ல ஒரு வாரமாகக் காத்திருக்கிறார் அந்த மூதாட்டி.

கருப்பாயி என்ற அந்த மூதாட்டி, தனது மகள் ராமாத்தாள் இங்கு உட்காரச் சொல்லி சென்றதாகவும், தன் மகள் வந்து கொண்டிருக்கிறாளா என்றும், அவ்வழியாகப் போவோர் வருவோரைக் கேட்டபடியே இருக்கிறார். எழுந்து நடக்கக் கூட முடியாத கருப்பாயி, தன் மகள் விட்டுச் சென்ற இடத்திலேயே அமர்ந்திருக்கிறார்.

கருப்பாயிக்கு தனது மகன் மற்றும் மருமகள் பெயர் மட்டுமே நினைவில் இருக்கிறது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது நினைவில் இல்லை.

தனது கணவர் நாகராஜ் இறந்தபிறகு வீட்டு வேலை செய்து தனது குழந்தைகளைக் காப்பாற்றி திருமணம் செய்து வைத்ததாக கருப்பாயி கூறினார். முதலில் மகன் வீட்டில் இருந்ததாகவும், பிறகு மகன் தன்னை மகள் வீட்டில் விட்டு விட்டுச் சென்றுவிட்டதாகவும் கண்ணீரோடுக் கூறுகிறார்.

அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிலர், கருப்பாயிக்கு உணவு கொடுத்து வருகின்றனர்.

விதி தன்னை இவ்வளவு சீக்கிரம் இங்கே கொண்டு வந்தது குறித்து அறிந்து கண்ணீரோடு அதே சமயம், தன் பிள்ளைகள் தன்னை வந்து அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடும் வீதி மீது விழி வைத்துக் காத்திருக்கிறார் கருப்பாயி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com