தமிழ் சொற்களை தொகுக்க 'சொற்குவை' திட்டம்: அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்

ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் உள்ள கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை தொகுக்கும் பணிக்காக சொற்குவை என்ற திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்
சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவ பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற பைந்தமிழ் மன்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜனை கெளரவிக்கிறார் கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன். 
சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவ பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற பைந்தமிழ் மன்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜனை கெளரவிக்கிறார் கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன். 

ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் உள்ள கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை தொகுக்கும் பணிக்காக சொற்குவை என்ற திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரி தமிழ்த்துறை பைந்தமிழ் மன்றம் சார்பில் பன்முகத் தமிழ் தொடர் கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது. கருத்தரங்கை தொடங்கி அமைச்சர் பாண்டியராஜன் பேசியது:-
பல மொழிகள் தங்கள் அடையாளத்தை படிப்படியாக இழந்து வருகின்றன. ஆனால் தமிழ் மற்றும் சீன மொழியான மாண்டரின் ஆகிய இரு மொழிகளும் அவற்றின் வரி வடிவத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளன. நமது மொழியின் சிறப்பை மேலோங்கச் செய்யவும், தொழில்நுட்ப வசதிகள் மூலம் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகும். 
கட்டமைப்பு அவசியம்: அதிக மக்களால் பேசப்படும் ஆங்கில மொழியில் சுமார் பத்து லட்சம் சொற்கள் உள்ளன. அந்த மொழிக்கென 400 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற கட்டமைப்பு தமிழுக்கு இல்லாததால் நமது தாய் மொழியில் மொத்தம் எத்தனை சொற்கள் உள்ளன என்ற கணக்கீடும், அனைத்து ஆங்கில சொற்களுக்கும் இணையான தமிழ்ச்சொற்களும் நம்மிடத்தில் இல்லை. தமிழில் மொத்தம் 3.36 லட்சம் சொற்கள் என்று கூறப்பட்டாலும் அது குறித்த புள்ளி விவரங்கள் இருக்கவில்லை. 
எனவே தினமும் வளர்ச்சி பெற்றும் அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளை கருத்தில் கொண்டு ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் உள்ள கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை தொகுக்கும் பணிக்காக சொற்குவை என்ற திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றார் பாண்டியராஜன். 
கல்லூரியின் முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், இந்துஸ்தான் கல்லூரி முதல்வர் சீ.திருமகன், தமிழ்த்துறை தலைவர் ராஜேஸ்வரி, பைந்தமிழ் மன்ற உறுப்பினர்கள் ஸ்ருதி, சுஜனி, இலக்கியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
ஹார்வர்டு பல்கலை. தமிழ் இருக்கைக்கு இன்னும் ரூ.2 கோடி தேவை
இது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:- அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்காக ரூ.40 கோடி தேவைப்படும் நிலையில் தற்போது வரை ரூ.38 கோடி திரட்டப்பட்டுள்ளது. சில நாள்களில் மீதமுள்ள ரூ.2 கோடியும் திரட்டப்பட்டு விரைவில் தமிழ் இருக்கை அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய தொல்லியல் துறையை ஏதோ விரோதிபோல நினைப்பதை நிறுத்தவேண்டும். தமிழக தொல்லியல் துறையில் மொத்தமே 100 பணியாளர்கள் தான் உள்ளனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் மத்திய தொல்லியல் துறையினர் 1,500 பேர் பணிபுரிகின்றனர். மத்திய தொல்லியல்துறை மிகப்பெரிய அரசு நிறுவனம். சில மாதிரிகளை வைத்து, தமிழர்களின் வரலாற்றை திருத்தி விடுவர் என்ற அச்சம் கொள்ளத் தேவை இல்லை. கீழடியில் மத்திய தொல்லியல் துறையோடு இணைந்து தமிழக தொல்லியல் துறையும் வருகிற ஜனவரியில் ஆய்வு நடத்தும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com