பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் முன்கூட்டியே விடுவிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் ராஜிவ் கொலை வழக்கிலிருந்து முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் முன்கூட்டியே விடுவிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

புதுதில்லி: பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் ராஜிவ் கொலை வழக்கிலிருந்து முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் ஒருவர் பேரறிவாளன். இவர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு இவரது தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், பேரறிவாளனுக்கு தமிழக அரசு ஒரு மாத காலம் பரோல் வழங்கியது. பின்னர், மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. பரோல் முடிந்த நிலையில் பேரறிவாளன் மீண்டும் சிறைக்குத் திருப்பினார்.

இந்நிலையில், பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவைத் தாக்கல் செய்திருந்தார். வழக்குரைஞர்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு சுப்பிரமணியன் ஆகியோர் மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனுவில், 'ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்திற்கு காரணமானதாகக் கூறப்படும் ஐஇடி வெடிகுண்டில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரி நான் வாங்கிக் கொடுத்த பேட்டரி என்பது நிரூபிக்கப்படவில்லை. மேலும் நான் அளித்த வாக்குமூலத்தினை விசாரணை அதிகாரி தியாகராஜன் முறையாக பதிவு செய்யவில்லை என்பதனை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதன் மூலம்      நான் குற்றம் இழைக்காமலேயே 26 ஆண்டுகளாக சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறேன். இதனால், எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த மாதம் 15-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சங்கரநாராயணன், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தின் பின்னணி, சதிச் செயல் பற்றிய விசாரணை தொடர்புடைய குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்னும் தாக்கல் செய்யவில்லை. மேலும், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்குக் காரணமான வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட இரு பேட்டரிகள் பேரறிவாளன் வாங்கிக் கொடுத்ததுதானா என்பதும் நிரூபிக்கப்படவில்லை. மேலும், வெடிகுண்டு தயாரித்தவரிடமும் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. இதனால், அந்த விசாரணை முடியும் வரை பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதிட்டார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் பேரறிவாளன் விடுவிக்கப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து இரு வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கம் போல பேரறிவாளனை ராஜிவ் கொலை வழக்கிலிருந்து முன்கூட்டியே விடுவிக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். பிறகு நீதிபதிகள் தெரிவித்த கருத்து பின்வருமாறு:

ராஜிவ் கொலை வழக்கினை விசாரிக்க நியமிக்கப்பட்ட சிபிஐ தலைமையிலான பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் அறிக்கையினை பேரறிவாளன் தரப்புக்கு வழங்கலாம். அவர்கள் அதனை பார்வையிட்டு விட்டு சிபிஐ தரப்பிடம் திருப்பி அளித்து விட வேண்டும். எந்த விதமான நகலையும் எடுக்கக் கூடாது. 

பேரறிவாளன் தரப்பானது விசாரணை ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள் தொடர்பாக விரிவான மனுவினை விரைவாக தாக்கல் செய்து வழக்கை முடிக்கலாம்; அல்லது இது தொடர்பான விசாரணையை மீண்டும் முதலிலிருந்து நடத்தச் செய்யலாம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பேரறிவாளனை  ராஜிவ் கொலை வழக்கிலிருந்து முன்கூட்டியே விடுவிக்க முடியாது.

இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com