வேட்பாளர்கள் அச்சடிக்கும் பிரசுரங்கள் குறித்த விவரங்களை அச்சகங்கள் தெரிவிக்க வேண்டும்: தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு

சென்னை, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் குறித்த விவரங்களை

சென்னை, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் குறித்த விவரங்களை அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்களுக்கு ஆதரவாக அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் குறித்த விவரங்களை அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உடனடியாக தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.
அச்சக உரிமையாளர்களுடன் இன்று ஆலோசனை: புதன்கிழமை மாலை 3 மணியளவில் அச்சகம் மற்றும் வடிவமைப்பு உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் செலவின பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது.
அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் அச்சடிக்கும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றை ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு அல்லது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்ற பின்பே பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமலும், துண்டு பிரசுரங்களின் எண்ணிக்கை, அச்சகத்தின் பெயர் இடம்பெறாமலும் அச்சடிக்கப்பட்ட விளம்பரங்களை அடிப்படையாக கொண்டு வேட்பாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விளம்பரங்களின் செலவுத் தொகை அனைத்தும் வேட்பாளர்களின் தேர்தல் செலவில் வரவு வைக்கப்பட வேண்டும். ஆகையால் அச்சக உரிமையாளர்கள் தங்களது அச்சகங்களில் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை மற்றும் செலவுத் தொகையையும், வடிவமைப்பாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் ஒளிப்பதிவு செலவுத் தொகையையும் உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
அச்சகத்துக்கு சீல்: ஆர்.கே.நகர் தொகுதியில் துண்டுப்பிரசுரங்களின் எண்ணிக்கை மற்றும் செலவுத் தொகை ஆகியவற்றை இடம்பெறச் செய்யாமல் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டன. 
அச்சகத்தை ஆய்வு செய்ததில் முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல், தொழில்புரிவது கண்டறியப்பட்டு உடனடியாக அச்சகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் அச்சகங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் கார்த்திகேயன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com