குளிர்கால கூட்டத் தொடர்: தில்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

எதிர் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் குறித்து விவாதிக்க தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

எதிர் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் குறித்து விவாதிக்க தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில், இரு அவைகளின் நடவடிக்கைகளையும் எவ்வாறு ஆக்கப்பூர்வமாகச் மேற்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதானக் கட்சித் தலைவர்களுக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் விருந்து உபசாரம் அளிக்க உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 15-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 5 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 14 அமர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அண்மையில் அமல்படுத்தப்பட்ட வனப் பாதுகாப்பு அவசரச் சட்டம், திவால் நிறுவனங்கள் அவசரச் சட்டம் ஆகியவற்றுக்கு இந்தக் கூட்டத் தொடரில் பின்ஏற்பு அனுமதி கோரப்படும் எனத் தெரிகிறது. இதைத் தவிர, நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகைக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீடு மசோதாவானது முறையாக அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதைத் தவிர, குஜராத் தேர்தலுக்கு முன்பாக 200-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைத்தது, விவசாயிகள் பிரச்னை, உத்தரப் பிரதேச அரசு தாஜ்மஹாலைப் புறக்கணித்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, பாஜக தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு திடீரென அதிகரித்தது உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பலாம் எனத் தெரிகிறது.
இந்தச் சூழலில், குளிர்கால கூட்டத் தொடரில் எந்தெந்த விஷயங்களை பிரதானமாக விவாதிக்கலாம்? என்பது குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர்களிடம் சுமித்ரா மகாஜன் அப்போது வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com