புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களுக்கு ‘சிந்தாமல் சிதறாமல்’ நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களுக்கு ‘சிந்தாமல் சிதறாமல்’ நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துளளார்.
புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களுக்கு ‘சிந்தாமல் சிதறாமல்’ நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களுக்கு ‘சிந்தாமல் சிதறாமல்’ நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துளளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
இதுவரை யாரும் கண்டும், கேட்டுமிராத இல்லாத அளவுக்கு, ஒகி புயலால் பேரிடருக்குள்ளாகி, தவித்து வரும் கன்னியாகுமரி மாவட்ட மக்களை உடனடியாகச் சந்தித்து ஆறுதலும், நிவாரணமும் அளித்திடும் அக்கறையோ பரிவோ இன்றி, 15 நாட்கள் கழித்து சாவகாசமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் சென்று, திரும்பியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காலம் தாழ்த்தி சில நிவாரண அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கேரள அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, அந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆலோசனைகளின் பேரில், அம்மாநில முதல்வர் மீனவர்களுக்குப் பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து, நேரடியாகவே மறுவாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ‘குதிரை பேர’ அரசின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, பாதிக்கப்பட்ட மீனவர்களைச் சந்திக்காமலும், அவர்கள் கேட்ட நிவாரணத்தை உரிய நேரத்தில் அறிவிக்காமலும் இருந்துவிட்டு, தற்போது, காலதாமதமாக சில நிவாரண உதவிகளை அரைகுறையாக அறிவித்துள்ளார்.

மீன்பிடிக்கச் சென்று இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி, மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தைத் தொலைத்து விட்டு நிற்கும் மீனவர்களுக்கு 5000 ரூபாய் நிதியுதவி போன்றவை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிவாரண உதவிகள் உண்மையில் பாதிக்கப்பட்டு, துயரத்தில் வாடிக் கொண்டிருக்கும் மீனவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. அதுமட்டுமின்றி, வாழை மரம், ரப்பர் மரம் உள்ளிட்ட விவசாயச் சேதங்கள், படகுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் போன்றவற்றிற்கு நிவாரண உதவி, வாக்கி டாக்கி விநியோகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளில், எந்த நிலையிலும் ஆளுங்கட்சியினரின் தலையீடு அறவே இருக்கக் கூடாது என்று கருதுகிறது.

கடந்த காலங்களில் வெள்ள நிவாரணம், தானே புயல் நிவாரணம், வர்தா புயல் நிவாரணம் போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்களில், ‘எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்’, என்பது போல, ஆங்காங்குள்ள அதிமுகவினர் பங்கு போட்டுக் கொண்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால், கடும் பேரிடருக்குள்ளான கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை நேரடியாக, சிந்தாமல் சிதறாமல் முழுமையாகக் கொடுக்கப்பட வேண்டும் என்பது மிக மிக அவசரமும், அவசியமுமாகிறது.

ஆகவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள், பொது நல அமைப்புகள் மற்றும் மீனவ அமைப்புகள் அடங்கிய ஒரு நிவாரணக் குழுவினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைத்து, அந்தக் குழுவின் முன்னிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மீனவ குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்குவதில் எவ்வித கெடுபிடிகளும் செய்யாமல், கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் பதிவு செய்த, பதிவு செய்யாத அனைத்து மீனவர்களுக்கும் இப்போதாவது வாக்கி டாக்கி வழங்கி, வானிலை அறிவிப்பு குறித்து முன்கூட்டியே தெரிந்து கொண்டு தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com