செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா?: ராமதாஸ் கேள்வி

தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வுக்கான மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா?: ராமதாஸ் கேள்வி

தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வுக்கான மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக, கொடைக்கானல் அன்னைத் தெரசா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வுக்கான (TNSET-2018) இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு நீக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் இடஒதுக்கீட்டு முறைக்கு வேட்டு வைக்கும் சதியாகத் தோன்றுகிறது.

பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக நெட் என்ற பெயரில்  தேசியத் தகுதித் தேர்வும், செட் என்ற பெயரில் மாநிலத் தகுதித் தேர்வும் நடத்தப்படுகின்றன. நெட் தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் சி.பி.எஸ்.இ அமைப்பும், தமிழகத்தில் செட் தேர்வை கடந்த சில ஆண்டுகளாக அன்னை தெரசா பல்கலைக்கழகமும் நடத்தி வருகின்றன. இந்தத் தேர்வுகளில் இட ஒதுக்கீடு இல்லை என்றாலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளின் அடிப்படையில் தான் தகுதி மற்றும் தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயிக்கப்படுகின்றன. செட் தேர்வில் தொடக்கத்திலிருந்தே பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் என சமூகப் பிரிவுகள் வரிசைப்படுத்தப்பட்டு, அவர்களில் பொதுப்பிரிவினருக்கு ஒருவகையான தகுதி மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணும், பிற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதைவிடக் குறைந்த தகுதி மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த வரிசையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை நீக்கி இருப்பதன் மூலம் இடஒதுக்கீட்டு முறையில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் குழப்பத்தை ஏற்படுத்தி  உள்ளது. அதுமட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஒரு பிரிவுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரை பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் என சமூகப் பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டு, அவற்றில் பொதுப்பிரிவுக்கு 55 விழுக்காடும், பிற பிரிவினருக்கு 50 விழுக்காடும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அதேபோல் தேர்ச்சி மதிப்பெண்களாக பொதுப்பிரிவுக்கு முதல் இரு பாடங்களில் தலா 40 விழுக்காடும்,  மூன்றாவது பாடத்தில் 50 விழுக்காடும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. பிற பிரிவினருக்கு இது முறையே  35%, 35%, 40% ஆக இருந்தது. இந்த நடைமுறையில் இன்று வரை எந்தக் குழப்பமும் இல்லை.

ஆனால், இப்போது சமூகப் பிரிவுகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகிய இரு பிரிவுகள் நீக்கப்பட்டு, அவற்றுக்கு பதிலாக பிற பிற்படுத்தப்பட்டோர் (கிரீமிலேயர்), பிற பிற்படுத்தப்பட்டோர்(கிரீமிலேயர் இல்லாதோர்) ஆகிய இரு பிரிவுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.  இது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் கடைபிடிக்கப்படும் முறையாகும். இப்போது இதையே மாநில  தகுதித் தேர்வுக்கும் நடைமுறைப்படுத்தியிருப்பதன் மூலம், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆகியவை இணைக்கப்பட்டு 1989-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

புதிய முறையில் பொதுப்பிரிவினர் மட்டுமின்றி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், அதாவது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்துக்கும் கூடுதலாக வருவாய் ஈட்டுவோரும் 55% தகுதி மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல், தகுதித்  தேர்வில் தேர்ச்சி பெற 3 பாடங்களில் முறையே 35%, 35%, 40% மதிப்பெண்கள் எடுப்பதற்கு பதிலாக முறையே 40%, 40%, 50% மதிப்பெண்கள் எடுக்க வேண்டியிருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும்  என்றால், 1951-ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தலைமையில் போராடிப் பெறப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடும், 1980-ஆம் ஆண்டு முதல் எனது தலைமையில் போராட்டம் நடத்தி 1989-ஆம் ஆண்டில் பெறப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடும் சிதைக்கப் பட்டு, கிரீமிலேயர் என்ற பெயரில் கணிசமானவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தகுதித்தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளில் மட்டும் கடைபிடிக்கப்பட்டு வந்த முறையை  மாநிலத் தகுதித்தேர்வில் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை என்ன? இதை அன்னை தெரசா பல்கலைக்கழகம் தன்னிச்சையாக செய்ததா? அல்லது இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாக தமிழக அரசும் இதில் இணைந்து இந்த முறையைக் கொண்டு வர அனுமதி அளித்ததா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் பதிலளிக்க வேண்டும்.

மாநிலத் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை; அதனால் இப்புதிய நடைமுறையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மாநில அரசு சப்பைக்கட்டு கட்டக்கூடாது. மாநிலத் தகுதித் தேர்வில் நேரடியாக இட ஒதுக்கீடு இல்லை என்றாலும் கூட, இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைப் பொறுத்து தான்  தகுதி மற்றும் தேர்ச்சி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதால் இது பிற்படுத்தப்பட்ட மற்றும்  மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதே நடைமுறை கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கும் நீட்டிக்கப்பட்டால் தமிழகத்தில் சமூக நீதிக்கு சாவுமணி  அடிக்கப்படும். 

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது எப்படி சமூகநீதிக்கு எதிரானதோ அதேபோல் கிரீமிலேயரை பொருத்தி 75% மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை பறிப்பதும் சமூகநீதிக்கு எதிரானது தான். இதை அனுமதித்தால் மத்திய அரசுப் பணிகளில் 27% இடங்கள் எப்படி நிரப்பப்படாமல் மற்ற பிரிவினருக்கு தாரைவார்க்கப்படுகிறதோ, அதேபோல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் 30 விழுக்காடு இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் 20% இடங்களும் நிரப்பப்படாமல் மற்றவர்களுக்கு தாரை வார்க்கப்படும். இதை இலக்காக வைத்தே புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

தமிழகத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான இப்புதிய நடைமுறையை அன்னை தெரசா பல்கலைக்கழகம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இதற்காக சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இந்த அநீதிக்கு எதிராக அறப்போராட்டத்தையும் சட்டப்போராட்டத்தையும் பா.ம.க. நடத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com