ஆர்.கே. நகரில் பணப் பட்டுவாடா தடுக்கப்படும்: சிறப்பு அதிகாரி பத்ரா உறுதி

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ரா ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.
ஆர்.கே. நகரில் பணப் பட்டுவாடா தடுக்கப்படும்: சிறப்பு அதிகாரி பத்ரா உறுதி

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ரா ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா தலைமையில் நடைபெற்றது. அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார் விக்ரம் பத்ரா. 
திமுக தரப்பில் அவரை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே. நகரில் ஒரே நாளில் அதிமுக, டிடிவி தினகரன் அணி சார்பில் சுமார் ரூ.100 கோடி வரை பணப் பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதாக புகார் தெரிவித்தார். 
அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி சில ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்தார். அவருடன் திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்காக பணப்பட்டுவாடா செய்வது தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவித்தாலும் அது ஏற்கப்படுவதில்லை எனவும் திமுக குற்றஞ்சாட்டியது.
பாஜக சார்பில் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தேர்தலை வெளிப்படையாக, நியாயமாக நடத்த வேண்டும். அப்படி நடத்த முடியாவிடில், இத்தேர்தலை நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என்று தெரிவித்தார்.
அதிமுக தரப்பில், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, திமுக, பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தனர். தோல்வி பயத்தில் தேவையற்ற குற்றச்சாட்டை தங்கள் மீது அவர்கள் சுமத்துவதாக கூறியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் சிலரும் பணப் பட்டுவாடா குறித்து பத்ராவிடம் புகார் தெரிவித்தனர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்து சரமாரி புகார் தெரிவித்த கட்சி நிர்வாகிகளிடம், இத்தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பத்ரா உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com