புதுவையின் வரலாற்றுச் சின்னமான வானொலி திடல் மீட்கப்படுமா?

புதுச்சேரியின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான வானொலி திடலை மீட்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
புதுவையின் வரலாற்றுச் சின்னமான வானொலி திடல் மீட்கப்படுமா?

புதுச்சேரியின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான வானொலி திடலை மீட்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

புதுச்சேரி அரசியல் வரலாற்றில் மறைக்க, மறக்க முடியாத இடம் முதலியார்பேட்டை வானொலி திடல். தேசிய தலைவர்களான நேரு, காமராஜர், கேரள கம்யூனிஸ்ட் தலைவர் நம்பூதிரிபாட், தமிழக தலைவர்களான பெரியார், கருணாநிதி, எம்ஜிஆர், புதுச்சேரி அரசியல் தலைவர்களான குபேர், அன்சாரி, துரைசாமி, சுப்பையா போன்ற தலைவர்களும் பேசிய வரலாற்று திடல் என்ற பெருமை இதற்கு உண்டு.

இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, அது திரும்பப் பெறப்பட்ட பிறகு, முதல் பொதுக்கூட்டம் இங்குதான் நடைபெற்றது.

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின்போது முதலியார்பேட்டை நகராட்சியாக இருந்தது. நகராட்சி அலுவலகம், காவல் நிலையம் எதிரே அமைக்கப்பட்ட இந்தத் திடலை அப்போதைய மேயரான நந்தகோபால் 4.1.1950-ல் திறந்து வைத்தார். அதற்கான கல்வெட்டும், பீடமும், ஒலிபெருக்கியும் இப்போதும் சாட்சிகளாக எஞ்சி நிற்கின்றன.

அரசியல் கூட்டம், இலக்கியக் கூட்டம், விழிப்புணர்வு நாடகங்கள் உள்ளிட்டவற்றை இங்கு நடத்த அன்றைய முதலியார்பேட்டை நகராட்சியால் கட்டணம் பெறப்பட்டது.

வானொலி திடலில் அமைக்கப்பட்ட வானொலி ஒலிபெருக்கி மூலம் தினமும் காலையும், மாலையும் செய்திகள் ஒலிபரப்பப்பட்டன. மேலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், விவசாய நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்பட்டன.

இதுமட்டுமன்றி, வானொலி திடலில் சிறுவர்கள் விளையாடுவதற்கு சறுக்கு மரம், ஊஞ்சல் போன்றவை நகராட்சியால் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், முதலியார்பேட்டை நகராட்சி, புதுச்சேரி நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னர் இந்தத் திடல் தொடர்பான ஆவணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாயமாகத் தொடங்கின.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓரிரு நடைபாதைக் கடை ஆக்கிரமிப்புகள் மட்டுமே இருந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு தனியாரால் இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுவரை மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதுகுறித்து புதுச்சேரி அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் ஜெ.கோபி கூறியதாவது:
 1950-ஆம் ஆண்டில் முதலியார்பேட்டை சீமான் ராகவ செட்டியார் நகராட்சிக்கு தானமாக கொடுத்த நிலத்தில் வானொலி திடல் அமைக்கப்பட்டது.

வானொலி திடலில் இப்போது வானொலி தூண், கூம்பு வடிவ ஒலி பெருக்கி மட்டுமே எஞ்சி நிற்கின்றன. பீடத்தில் இருந்த கல்வெட்டு சிதைக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்தி சிலர் திடலைச் சுற்றியுள்ள நிலத்தை வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை செய்துவிட்டனர்.

வானொலி திடல் தொடர்பாக நகராட்சியில் இருந்த ஆவணங்களை திட்டம் போட்டு அழித்துவிட்டனர். இந்தத் திடலை மீட்க புதுவை அரசும், ஆளுநரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து முதலியார்பேட்டை வானொலி திடல் மீட்பு இயக்கத் தலைவர் இரா.அழகிரி கூறியதாவது:
 முதலியார்பேட்டை வானொலி திடலில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. 1962-ஆம் ஆண்டு தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய காமராஜர் வந்தார். இதே திடலில் அவர் பேசிய போது, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பதில், எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் தலைவர் சுப்பையாவுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி பேசினார். அத்தகைய பல வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமைகளைக் கொண்டது இந்த வானொலி திடல்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வர் நாராயணசாமியும், முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமியும் வானொலி திடலை மீட்போம் என இதே திடல் அருகே நின்று வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதுவரை இந்த வாக்குறுதியை முதல்வர் நாராயணசாமி நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சித் தலைவரான ரங்கசாமியும், இதுகுறித்து பேச மறுக்கிறார்.

இதே வாக்குறுதியை அளித்த இந்தத் தொகுதி எம்.எல்.ஏவான பாஸ்கரும் இதைக் கண்டுகொள்வதில்லை. வானொலி திடல் திறக்கப்பட்ட தினம் ஜன.4-ஆம் தேதி வருகிறது. அதற்குள் அந்தத் திடல் மீட்கப்படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

ஆளுநர் தலையிடுவாரா?
 புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் ரெளடி செந்தில் கட்டுப்பாட்டில் இருந்த ஆக்கிரமிப்பு பகுதிக்குள் கடந்த சனிக்கிழமை அதிரடியாக நுழைந்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, அந்த இடத்தை மீட்டார். பின்னர், அந்தந்த வீட்டுமனை உரிமையாளர்களிடம் அந்த இடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் ஆக்கிரமிப்பு நிகழாமல் இருக்க 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேபோல, முதலியார்பேட்டை வானொலி திடலையும் மீட்க துணை நிலை ஆளுநர் கிரண் பேடி முன்வர வேண்டும் என வானொலி மீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

"இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை 3 முறை நேரிலும், 5 முறை கடிதம் மூலமாகவும் , முதல்வர் நாராயணசாமியை 5 முறை நேரடியாகவும், முன்னாள் முதல்வர் ரங்கசாமியை 100 முறையும் தொடர்பு கொண்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இருப்பினும், தட்டாஞ்சாவடி பிரச்னையில் ஆளுநர் தலையிட்டதை கேள்விப்பட்டவுடன் வானொலி திடலை மீட்கும்படி மீண்டும் கடிதம் எழுதியுள்ளோம்' என்கின்றனர் வானொலி மீட்பு இயக்கத்தினர்.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com