புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 3,500 போலீஸார் பாதுகாப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். 368 இடங்களில் வாகனச் சோதனை நடத்தப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். 368 இடங்களில் வாகனச் சோதனை நடத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் டிசம்பர் 31-ஆம் தேதி நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 31-ஆம் தேதி அன்றிரவு சுமார் 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மயிலாப்பூர், அடையாறு, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராய நகர், பரங்கிமலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூர்,அண்ணாநகர்,புளியந்தோப்பு ஆகியப் பகுதிகளில் அன்று இரவு 9 மணியில் இருந்து ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை வரை 368 இடங்களில் வாகனத் தணிக்கை செய்யப்படுகிறது.
கடந்தாண்டு, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட 30 சாலை விபத்துக்களில் 5 பேர் இறந்தனர். இதனால் இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, சாலை விபத்துக்கள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுக்கும் வகையில் 20 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 25 சாலை பாதுகாப்புக் குழுக்கள் மோட்டார் சைக்கிளில் ரோந்து செல்வார்கள்.
100 இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: கோயில்கள், தேவாலயங்கள், கடற்கரைகள், முக்கியமான சாலைகள் என 100 முக்கியமான இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். 
மெரீனா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை ஆகிய இடங்களில் கடற்கரையில் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் மணலில் செல்லக்கூடிய ஏ.டி.வி. வாகனங்கள் மூலம் போலீஸார் ரோந்து செல்வர். மேலும் இந்தப் பகுதிகளில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்படும். மெரீனாவில் கடற்கரையோரத்தில் குதிரைப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.
சென்னையில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் பாதுகாப்பு பணிக்காக 5 -இல் இருந்து 10 ரோந்து வாகனங்கள் கூடுதலாக பயன்படுத்தப்படும். மதுபோதையில் வாகனம் ஓட்டினால் வழக்குப் பதியப்பட்டு, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் பிற்காலத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்குரிய காவல்துறையின் தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு சிரமம் ஏற்படும் என காவல்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com