நெல் ஆராய்ச்சி நிலைய பவள விழாவில் பங்கேற்ற வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அருகில் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் மற்றும் ஆட்சியர் எ.சுந்தரவல்லி, 
நெல் ஆராய்ச்சி நிலைய பவள விழாவில் பங்கேற்ற வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அருகில் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் மற்றும் ஆட்சியர் எ.சுந்தரவல்லி, 

113 லட்சம் மெட்ரிக் டன் தானிய உற்பத்தி செய்ய இலக்கு: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் நிகழாண்டில் 113 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யவும், அதில் 60 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர்

தமிழகத்தில் நிகழாண்டில் 113 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யவும், அதில் 60 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார். 
திருவள்ளூர் அருகே திரூரில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பவளவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது . இந்த விழாவிற்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கு.ராமசாமி தலைமை வகித்தார். வேளாண்மைத்துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, ஆட்சியர் எ.சுந்தரவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் வெ.ரவி வரவேற்புரை வழங்கினார். 
இதில் பவள விழா மலரை வெளியிட்டு, அமைச்சர் துரைக்கண்ணு பேசியது: 
இந்தப் பகுதியில் மானாவாரி புழுதிக்கால் சாகுபடிக்கேற்ற வறட்சியை தாங்கி வளரக் கூடிய நெல் ரகங்களை கண்டறியும் நோக்கத்தில், 1942-இல் இந்த நெல் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டது. பின்னர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்நிலையம், கடந்த 75 ஆண்டுகளாக விவசாயிகளின் மேம்பாட்டில் முழுமையாக ஈடுபட்டு வருகிறது.
இதுவரையில், 14 வகையான நெல் ரகங்களைக் கண்டறிந்து சாதனை படைத்துள்ளது. இதில் 2015-இல் கண்டறிந்த டி.கே.எம் -13 ரகம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாங்கி வளர்வதோடு, விவசாயிகளுக்கு அதிக உற்பத்தியையும் அளிக்கிறது. அதனால், இந்த நெல் ரகங்களை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி மாநில அளவில் பல்வேறு பகுதிகளிலும் பயிரிடுகின்றனர். 
இங்கு, விவசாயிகள் இருமடங்கு சாகுபடி - மும்மடங்கு லாபம் பெறும் நோக்கத்தில் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. அதனால் , விவசாயிகள் அனைவரும் வேளாண்மைத்துறையின் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி சாகுபடி பரப்பளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன் வரையில் இருந்தது. 
தமிழகத்தில் 33 சதவீதம் பேர் நெற்பயிரும், 67 சதவீதம் பேர் மற்ற வகை பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். நிகழாண்டில் நல்ல மழை பெய்துள்ளதால் 113 லட்சம் மெட்ரிக் டன் வரையில் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யவும், அதில் 60 சதவீதம் வரையில் நெல் உற்பத்தி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
விவசாயிகள் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படும்போது, அதற்கான பயிர் இழப்பீடு தொகையைப் பெறுவதற்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும். கடந்தாண்டில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் 15.37 லட்சம் பேர் காப்பீடு செய்திருந்தனர். 
இதில் இழப்பீடாக நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு தலா ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 22 ஆயிரம் வரையில் என மொத்தம் ரூ.2,500 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் 36,365 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். மேலும், விவசாயிகள் பயன்பெறும் நோக்கத்தில் ஏரி குளங்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டு நீர் ஆதாரம் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 
விழாவில், அமைச்சர்கள் பா.பெஞ்சமின், க.பாண்டியராஜன், பொன்னேரி எம்எல்ஏ பலராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
முன்னதாக, இதையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் புதிய நெல் வகைகள், பயறு வகைகள், இயற்கை உரங்கள் மற்றும் கருவிகள், நவீன விவசாய கருவிகள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com