ஜல்லிக்கட்டு போராட்டம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம்

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகான சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம்

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகான சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, பேரவை விதி 110-ன் கீழ் அவர் படித்தளித்த அறிக்கை:
சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த 23-ஆம் தேதி காலை பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் ஜல்லிக்கட்டுக்கான தடைகள் சட்டப்படி நீக்கப்பட்டு விட்டன என விளக்கிக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அமைதியாகக் கலைந்து செல்லும்படி கூறினர். இதையடுத்து, பெரும்பாலானோர் கலைந்து சென்றனர்.
நடுக்குப்பத்தில் சட்டவிரோத கும்பல் கூடி, மெரீனா நோக்கிச் செல்ல முற்பட்டபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர். ஆனாலும், அந்தக் கும்பல் காவல் துறையினர் மீது கற்கள், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது. இதனால், நடுக்குப்பம் மீன் சந்தை தீயில் எரிந்து சேதமடைந்தது. காவல் துறையினர் எச்சரித்தும் கேட்காமல் அவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். காவல் துறையினர், தகுந்த எச்சரிக்கைக்குப் பிறகு குறைந்தபட்ச பலத்தை உபயோகித்து கலைந்து போகச் செய்தனர்.
நவீன-சுகாதாரமான மீன் சந்தை: சேதமடைந்த நடுக்குப்பம் மீன் சந்தையை மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்துள்ளனர். மீன் சந்தை சேதமடைந்துள்ளதால், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தாற்காலிகமாக மீன் விற்பனை செய்ய வசதியாக சாலையின் தெற்குப் பகுதியில் மீன் வளத் துறையால் மீன் சந்தை ஓரிரண்டு நாள்களில் அமைத்து முடிக்கப்படும்.
மேலும்,சென்னை மாநகராட்சி மூலம் சாலையின் வடக்குப் பகுதியில் ரூ.70 லட்சத்தில் ஒரு நிரந்தர, நவீன-சுகாதாரமான நிரந்தரமாக மீன் சந்தை உடனடியாக அமைத்துத் தரப்படும். மாட்டாங்குப்பம், அயோத்திகுப்பம் மீனவர்களின் உபகரணங்கள், இதர பொருள்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து களஆய்வு செய்து, மதிப்பீட்டின் அடிப்படையில் உரிய நிவாரணம் விரைவில் அளிக்கப்படும்.
விசாரணை ஆணையம்: போராட்டங்களின் தொடர்ச்சியாக கடந்த 23-இல் சென்னை, மதுரை, கோவை, இதர பகுதிகளில் நடந்த சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளின் உரிய காரணங்கள், சூழ்நிலைகளை விசாரிப்பதற்கு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றார்.

வரம்புகள் என்ன?

வன்முறைச் சம்பவங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் வரம்புகள் குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு மூலமாக இருந்த காரணங்கள், சூழ்நிலைகளைக் கண்டறியவும், அதனால் பொது-தனியாரின் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து விசாரிக்கப்படும். சம்பந்தப்பட்ட காவல் துறையினரால் உரிய அளவில் அளவில் பலப்பிரயோகம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து விசாரிக்கப்படும்.
காவல் துறையினரின் செயல்பாட்டில் அத்துமீறல் இருந்ததா என்றும் அவ்வாறு இருந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை அளிக்கப்படும். இப்படிப்பட்ட நிகழ்வுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் ஆணையம் பரிந்துரைக்கும். விசாரணையை முடித்து மூன்று மாத காலத்துக்குள் முடித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படும் என்றார்.

கைதான மாணவர்கள் விடுதலை

ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது வழக்குகள் பதிந்து, சென்னையில் 312 பேரும், பிற மாவட்டங்களில் 175 பேரும் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கைது செய்யப்பட்டவர்களில் 21 பேரும், இதர மாவட்டங்களில் 15 பேரும் மாணவர்கள். இவர்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, வழக்குகளில் இருந்து முழுமையாக விடுவிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
கடும் நடவடிக்கை: காவலர்கள், தீ வைத்தல், வன்முறை போன்ற சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்கள், விடியோ காட்சிகள் வெளியாகின. இவை கணினி-தடயவியல் வல்லுநர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது உறுதியானால், சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com